`குற்றவாளிகளே நிற்கிறாங்க; நான் போட்டியிடக் காரணம் இதுதான்!’- எம்.பி தேர்தலில் களமிறங்கும் சரிதா நாயர் | saritha nair to contest in elections from kerala

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (29/03/2019)

`குற்றவாளிகளே நிற்கிறாங்க; நான் போட்டியிடக் காரணம் இதுதான்!’- எம்.பி தேர்தலில் களமிறங்கும் சரிதா நாயர்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹைபி ஈடனுக்கு எதிராக சரிதா நாயர் களம் இறங்குவதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரிதா நாயர்


கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் பிரபலமானவர் சரிதா நாயர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹைபி ஈடன் என பலருக்கும் சோலார் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹைபி ஈடனுக்கு எதிராக எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சரிதா நாயர் முடிவு செய்துள்ளார்.

சரிதா நாயர்


தேர்தலில் போட்டியிடுவதற்காக எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்துக்கு வேட்புமனு பெற சென்ற சரிதா நாயர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``இந்தத் தேர்தலில் சில குற்றவாளிகள் போட்டியிடுகிறார்கள். அரசியல் பின்புலம் இருந்தாலும் குற்றவாளியாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதி ஆகலாம். அவர்கள் போட்டியிடலாம் என்றால் நானும் போட்டியிடலாம். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நான் ஹைபி ஈடனுக்கு எதிராகப் போட்டியிட முடிவுசெய்துள்ளேன். மற்றபடி நாடாளுமன்றத்துக்குள் சென்று அமர வேண்டும் என்பதற்காக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாமல் இத்தனை வருடங்களாக இவர்களுக்கு எதிராக நான் போராடி வருகிறேன்" என்றார். கேரள மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.