`வேட்பு மனு திடீர் வாபஸ்!'- 2 பேரை கைகாட்டிய இயக்குநர் கெளதமன் | Director gowthaman withdraw his petition from Thoothukudi constituency

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:26 (29/03/2019)

`வேட்பு மனு திடீர் வாபஸ்!'- 2 பேரை கைகாட்டிய இயக்குநர் கெளதமன்

தூத்துக்குடி நாடாளுமன்றத்தின் வேட்பாளர்கள் தமிழிசை மற்றும் கனிமொழி ஆகியோரின் வேட்பு மனுக்களை நிராகரிக்காததால், தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக சுயேச்சை வேட்பாளரான  இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் கெளதமன்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்கான வேட்பாளர் வேட்பு மனு பரிசீலனை கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் பேரரசு கட்சி சார்பில் வேட்பாளர் இயக்குநர் கௌதமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேட்புமனு பரிசீலனையின்போது தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்பதில் சிக்கல் எழுந்தது. இதற்கு தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, வேட்பு மனு பரிசீலனைக்கு வந்திருந்த வேட்பாளர்களின் ஆட்சேபனை கேட்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் கனிமொழி, தமிழிசை ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

தமிழிசை வேட்பு மனு தாக்கல்

அப்போது, தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளருமான இயக்குநர் கௌதமன் அரங்கில் இல்லை. இதைத்தொடரந்து சிறிது நேரத்துக்குப் பிறகு உள்ளே வந்த இயக்குநர் கௌதமன், தமிழிசை மற்றும் கனிமொழியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த கலெக்டர், விளக்கம் கேட்டு கடிதம் எழுதித் தருமாறு கூறினார்.  

கௌதமன் அளித்த கடிதத்தின்பேரில் இன்று இயக்குநர் கௌதமன், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியை சந்தித்து விளக்கம் கேட்டார். இதையடுத்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். 

கனிமொழி வேட்பு மனு தாக்கல்

மேலும் அவர் கூறுகையில், ``தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சை வேட்பாளராக நான் மனுத் தாக்கல் செய்திருந்தேன். அப்போது தமிழிசை மற்றும் கனிமொழியின் மனுக்கள் மீது எழுந்த சந்தேகங்கள் காரணமாக, அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தமிழிசை மற்றும் கனிமொழி தரப்பிலிருந்து 1 மணி நேரத்துக்குள்ளேயே அவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது முற்றிலுமாக அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. ஜனநாயகப் படுகொலையின் மீதே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆகவே, அதிகார வர்க்கத்தின் இந்த ஜனநாயகப் படுகொலையின் மீது நின்றுகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு அருவருப்பாகவும் அசிங்கமாகவும் உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் இருந்து நான் விலகுகிறேன்‌. தற்போது நான் எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளேன். தூத்துக்குடியில் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இங்கே என்னைப் போட்டியிட கேட்டுக்கொண்ட எல்லோரிடமும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். இதையடுத்து அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க