`இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது!'- காவலாளியின் உயிரைக்காக்க துடிக்கும் நண்பர் | 3 times dialysis in a week, ooty man seeks help for saving his chowkidar friend

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:19:00 (28/03/2019)

`இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது!'- காவலாளியின் உயிரைக்காக்க துடிக்கும் நண்பர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி அரசுக் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 ஊட்டி அரசுக் கலைக் கல்லூரி

ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியில் டிக்கே பகதூர் என்பவர் கடந்த15 ஆண்டுகளாக தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். நாற்பது வயதான  டிக்கே பகதூர் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு உடல் நலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். டிக்கே பகதூரை சோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். உடனடியாக டயாலிசிஸ் செய்ய வேண்டும் அல்லது மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மிகவும் வறுமை நிலையில் இருக்கும் இவரால் தன்னால் முடிந்த வரை பணத்தைச் செலவு செய்து டயாலிசிஸ் செய்துள்ளார். தற்போது வாரத்துக்கு மூன்று முறை  டயாலிசிஸ் செய்துவருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் இவர் வறுமை காரணமாக மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உள்ளார்.

காவலாளி பகதூர்

இது குறித்து டிக்கே பகதூரின் நண்பர் ஒருவர் கூறுகையில், ``வறுமை காரணமாக நேபாளத்திலிருந்து பிழைப்பு தேடி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரிக்கு வந்தோம். நண்பர் ஒருவர் உதவியுடன் ஊட்டி அரசு கல்லூரியில் கடந்த 2004-ம் ஆண்டு டிக்கே பகதூர் காவலாளியாக பணியில் சேர்ந்தார். அப்போது மாதம் ரூ. 2,500 சம்பளம் வழங்கினார். 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், இப்போது மாதம் ரூ.7,500 சம்பளம் மட்டுமே கிடைக்கிறது.  டிக்கே பகதுாரின் மகன்  இதே கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து  வருகிறார். இவருக்குக் கிடைக்கும் ரூ.7,500 சம்பளத்தை வைத்து தனக்கான சிகிச்சையை மேற்காெள்ள முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 8 மாதத்துக்கு முன்பு டிக்கே பகதூரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்துவருகிறார். 15 ஆண்டுகளாக பணியாற்றும் பகதூருக்கு எந்தப் பணி பாதுகாப்பும் இல்லை. வழங்கப்படும் சம்பளமும் போதுமானதாக இல்லை. இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். முறையான சிகிச்சை மேற்கொள்ள இயலவில்லை. இதைக் கருத்தில் கொண்டு மருத்துவ உதவியோ அல்லது உரிய ஊதியமோ வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் வருத்ததுடன்.