குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை! - 7 வருடங்களுக்குப் பிறகு வாலிபருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை | Tanjavur court awarded 17 years to a man for sexual assault

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (28/03/2019)

கடைசி தொடர்பு:19:20 (28/03/2019)

குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை! - 7 வருடங்களுக்குப் பிறகு வாலிபருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை

இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

 கூலித் தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் சத்யராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2012-ம் ஆண்டு, ஜூன் 4-ம் தேதி மானோஜிப்பட்டி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவுக்கு வந்திருந்தார். அதே நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் இரண்டரை வயது பெண் குழந்தை வந்திருந்தது. விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சத்யராஜ் துாக்கிச் சென்றார்.

பின்னர் மானோஜிப்பட்டி சுடுகாட்டில் வைத்து  கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் அந்தக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் அந்த குழந்தை மயக்கமடைந்ததால் பயந்துபோன சத்யராஜ் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் போட்டு விட்டு செல்வதற்காக வந்தார். அதே நேரத்தில் குழந்தையைக் காணவில்லை என அதன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது சத்யராஜ் குழந்தையைத் தூக்கி வந்ததைப் பார்த்து சத்தம் போட்டதும், குழந்தையை அப்படியே  போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

சத்தியராஜை அழைத்து வரும் போலீஸார்

பின்னர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக குழந்தையின் தாய் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சத்யராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  குற்றம்சாட்டப்பட்ட சத்யராஜுக்கு, குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும், குழந்தையை கடத்தியதற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை என விதித்ததோடு ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்தும் இன்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து சத்யராஜை போலீஸார் கைது செய்து பலத்த பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க