`அப்பா எடுத்த ஆயுதத்தை மகன் கையில் எடுத்திருக்கிறார்' - ஸ்டாலினை சாடிய ஜெயக்குமார் | jayakumar slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:34 (30/03/2019)

`அப்பா எடுத்த ஆயுதத்தை மகன் கையில் எடுத்திருக்கிறார்' - ஸ்டாலினை சாடிய ஜெயக்குமார்

`அப்பா எடுத்த அதே ஆயுதத்தை மகன் ஸ்டாலினும் கையிலெடுத்திருக்கிறார். ஆனால் அது நடக்காது'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

டாக்டர் எச்.வி.ஹண்டே எழுதிய `புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறுபிறவியெடுத்த வரலாறு' நூல் வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகர், நல்லி குப்புசாமி, நடிகை லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். நூலின் ஆங்கில பிரதியை இல.கணேசனும், தமிழ் பிரதியை அமைச்சர் ஜெயக்குமாரும் வெளியிட்டார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், ``தி.மு.க ஆட்சி வந்தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என ஸ்டாலின் கூறி இருப்பது நல்ல ஜோக்.

ஜெயக்குமார்

தி.மு.க.வில் இருக்கும் தலைவரை விட்டுவிட்டு எங்களுடைய தலைவர் பெயரை வைத்து அரசியல் செய்வது மானங்கெட்ட செயல். அன்றைக்கு எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது. கருணாநிதி, `நீங்கள் சரியாகி வந்தால் ஆட்சியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்றார். ஆனால், மக்கள் கருணாநிதிக்கு ஆதரவாக இருக்கவில்லை. தி.மு.கவைப் புறக்கணித்த அவர்கள், அ.தி.மு.க-வுக்கு மகத்தான வெற்றியை அளித்தனர். அதேபோன்றதொரு பாணியைத்தான் ஸ்டாலின் கையிலெடுத்திருக்கிறார். அன்றைக்கு அப்பா எடுத்த அதே ஆயுதத்தை மகன் (ஸ்டாலின்) இன்றைக்குக் கையில் எடுத்திருக்கிறார். அது நடக்காது.

தமிழகத்தில் ஒரு குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க-வுக்கும், தொண்டர்களுக்கும் இடையூறு ஏற்படுத்த நினைத்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு கொடுத்ததால் அதை விமர்சிக்க முடியாதவர்கள் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை விமர்சிக்கின்றனர். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கித் தரப்படும். தேர்தல் ஆணையம் குறித்து குற்றச்சாட்டு கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி, இந்த போட்டியில்  அ.ம.மு.க இல்லை. ஜெயலலிதா அலைதான் தமிழகத்தில் உள்ளது. அந்த அலையில் அவர்கள் மாண்டுபோவர்கள்; அதனால் போட்டியில் இல்லை'' என்றார்.