`மோடிக்கு நீங்கள் ஒரு சீட்டுகூட கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரியும்!’ - கலகலத்த டி.டி.வி.தினகரன் | ttv dinakaran participates AMMK loksabha campaign in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:36 (30/03/2019)

`மோடிக்கு நீங்கள் ஒரு சீட்டுகூட கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரியும்!’ - கலகலத்த டி.டி.வி.தினகரன்

டி.டி.வி தினகரன் தனது இரண்டாம் நாள் பிரசாரத்தை தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இசக்கி சுப்பையாவை ஆதரித்து எம் ஜி ஆர் நகர் மார்க்கெட் பகுதியிலிருந்து தொடங்கினார். 

தினகரன்


அந்தப் பகுதியில் கூடியிருந்த ஏராளமான பொதுமக்களிடையே பேசிய அவர், ``ஆளுங்கட்சி கூட்டணி துரோகக் கூட்டணி, அம்மாவுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று நீதிமன்றம் சென்ற பா.ம.க-வுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள். அன்புமணி வார்த்தையில் கூறினால் மானங்கெட்ட கூட்டணி, மத்தியில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்கள் என்பது மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் அனைத்து விதத்திலும் வளர்ச்சி அடைய அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பெரிய கட்சி என்று கூறுபவர்கள் எல்லாம் 20 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறார்கள். அ.ம.மு.க அம்மாவின் தொண்டர்களால் நடத்தப்படக் கூடிய இயக்கம்.  

டிடிவி

தேர்தலில் போட்டியிட இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஏனெனில் மத்தியில் உள்ளவர்களுக்கு நாம் மண்டியிடவில்லை என்பதால் தற்போது வரை நாம் போராட வேண்டி இருக்கிறது. நமது வேட்பாளர்களால்தான் தமிழக மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த ஆட்சியாளர்களை அப்புறப்படுத்த முடியும். அம்மா வழியில் 39 இடங்களில் போட்டியிடுகிறோம். நேர்மையான மக்களாட்சியை ஏற்படுத்தித் தருவோம். நமது தேர்தல் அறிக்கை என்பது ஏசி அறையில் உட்கார்ந்து தயாரிக்கப்பட்டது அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது..

அம்மா மக்கள் முன்னேற்றகழகம்

 

மத்திய மாநில ஆட்சியாளர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அகற்ற வேண்டும் என நீங்கள் விரும்பி வந்த நிலை தற்போது வந்திருக்கிறது. மோடிக்கு ஒரு சீட் கூட கொடுக்கமாட்டீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு வஞ்சித்துள்ளது. இனிமேல் அரசியலில் இந்தக் கட்சிகள் இருக்காமல் பண்ண வேண்டும். ஆட்சியில் அமர்த்தியவர்களுக்குதான் துரோகம் செய்தார்கள். ஆனால், நாம் எல்லாம் தெய்வமாக மதிக்கும் அம்மாவுக்கே துரோகம் செய்யும் இவர்கள் கொள்கைக் கூட்டணி என்கிறார்கள். அவர்கள் என்னென்ன திட்டங்களை எதிர்த்து போராடினார்களோ அந்த திட்டமெல்லாம் தி.மு.க ஆட்சியில் இருந்தபோதுதான் கொண்டு வரப்பட்டது . ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகி வந்தவர்கள் தற்போது சுயநலத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். தமிழக மக்களுக்காக இந்தக் கட்சிகள் என்ன செய்தார்கள்'' என்று பேசினார்.