வாகன சோதனையில் சிக்கிய 10 கோடி..! - ஆவணங்களைக் காட்டி மீட்ட தனியார் வங்கி | rupees ten crore seized in Tiruppur by ec officials

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:34 (29/03/2019)

வாகன சோதனையில் சிக்கிய 10 கோடி..! - ஆவணங்களைக் காட்டி மீட்ட தனியார் வங்கி

திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 10 கோடி பணம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதனடிப்படையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50,000-க்கும் அதிகமாக எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்றைய தினம் திருப்பூர் மாவட்டம் கரடிவாவி அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.10 கோடி பணம் அந்த வாகனத்தில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்தப் பணம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்குச் சொந்தமானது என்றும், கோவை மாவட்டம் போத்தனூரிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் விசாராணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் முழுமையாக இல்லாத காரணத்தால், பிடிபட்ட பணம் ரூபாய் 10 கோடியை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் அளிக்கப்பட்டு, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வங்கி அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கி அதிகாரிகள் அந்தப் பணத்தை மீட்டுச் சென்றனர்.