``இப்போது இருப்பது மோடி அடிமைகளின் அ.தி.மு.க!” - மகனுக்காகக் களமிறங்கிய ப.சிதம்பரம் விளாசல் | P.Chidamparam campaign for his son

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (30/03/2019)

``இப்போது இருப்பது மோடி அடிமைகளின் அ.தி.மு.க!” - மகனுக்காகக் களமிறங்கிய ப.சிதம்பரம் விளாசல்

``இந்தத் தேர்தல் மத்தியில் மட்டுமல்ல விரைவில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல்" என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.  

 

ப. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தி.மு.க தலைமையிலான மதச் சார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் கே.ஆர் பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். 

மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் இலக்கியதாசன், நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ``இந்தத் தேர்தல் பாசிச மோடி அரசை மாற்றும் தேர்தல் மட்டுமல்ல. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டமன்றத் தேர்தலுமாகும். இந்தத் தேர்தல் நம் கண் முன்னே நடக்கும் தேர்தல்.  விரைவில் வரும் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழக முதல்வராக்கும் தேர்தல் இது.

இப்போது உள்ள அ.தி.மு.க, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.கவோ ஜெயலலிதா வழி நடத்திய அ.தி.மு.கவோ அல்ல. இது முழுக்க முழுக்க மோடி அடிமைகளின் அ.தி.மு.க என்பதை உண்மையான அ.தி.மு.க வினர் உணரவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தலைவர் ராகுல்காந்தி கடைக்கோடியில் வறுமைக்கோட்டில் இருக்கும் 5 கோடிப் பேருக்கு மாதந்தோறும் 6,000 ரூபாய் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். இதை எப்படிக் கொடுக்க முடியும். என மோடி பதறுகிறார். நூறு நாள் வேலை திட்டத்தை நாங்கள் அறிவித்த போது இப்படித்தான் பதறினார்கள். நிறைவேற்றினோமா இல்லையா? 

பல்லாயிரம் கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தாகச் சொன்னோமே செய்தோமா இல்லையா?  அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு ஆயிரம் பேர் பயணம் செய்ய ஒரு லட்சம் கோடியில் ரயில்வே தடம் அமைத்தவர் மோடி. பலகோடி ஏழைகளுக்கு மாதம் ஆறாயிரம் வழங்குவது மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் சாத்தியமாகும்” என்றார்.

கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூ.மாவட்டச் செயலாளர் குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு தலா 200 ரூபாயும், பிரியாணியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க