'எலியும் புலியும்’, `புல்வாமா தாக்குதலை நடத்திய மோடி!’ - பிரசாரத்தில் உளறிய பிரேமலதா | Premalatha campaign in covai

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (30/03/2019)

'எலியும் புலியும்’, `புல்வாமா தாக்குதலை நடத்திய மோடி!’ - பிரசாரத்தில் உளறிய பிரேமலதா

கோவை

``கோவை பா.ஜ.க வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நேற்று கோவையில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி, கேரளாவில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் எலியும் புலியுமாக இருக்கின்றன"  என்று  உளறி, தொண்டர்களைத் திணறவைத்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து,  பிரமேலதா விஜயகாந்த் கோவை கணபதி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, "ஏன் இந்தக் கூட்டணிக்கு நாங்கள் ஓட்டு போடணும் என்று நீங்கள்  கேட்கலாம். தைரியமிக்க  ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், நம் நாட்டினைப் பாதுகாக்க வேண்டுமானால், இந்தக் கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். தி.மு.க கூட்டணி வேட்பாளர் டெபாசிட் வாங்க முடியாத அளவிற்கான வெற்றியை பா.ஜ.க வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர் என்றால் எப்படி தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியுமோ, அதேபோல சி.பி.ஆர் என்றால் கோவையில் எல்லோருக்கும் தெரியும். சி.பி.ஆருக்கு கிடைக்கும் வெற்றி தமிழக ஆளும் கட்சிக்கு கிடைக்கும் வெற்றி. பிரதமர் மோடிக்கு கிடைக்கும்  வெற்றி. 

பிரேமலதா

தமிழகத்தில்  40 தொகுதிகளிலும் இந்த மெகா கூட்டணி  வெற்றிபெறும். வெற்றுபெற்று நாடாளுமன்றத்திற்குச் செல்லும் 40 பேரும் நதிநீர் இணைப்பை சாத்தியப்படுத்துவார்கள்.  விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்வோம். பிரதமர் மோடி தலைமையில் இருக்கும் அரசு, ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்கியிருக்கிறது. இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தி.மு.க கூட்டணி  ஆட்சியில்  இமாலய ஊழல் நடந்துள்ளன. காமென்வெல்த், 2ஜி என்று ஏராளமான  ஊழல்கள். அதுமட்டுமில்லை, இலங்கையில் தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்த  தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு நாம்  பாடம் புகட்ட வேண்டும்.  ஒரு ஓட்டுகூட வீணாக்காமல் சி.பி.ஆருக்கு விழ வேண்டும். என்றவர், இங்கே காங்கிரஸோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடும் கம்யூனிஸ் கட்சியினர், கேரளாவில் எலியும் பூனையுமாக  இருக்கின்றனர் என்று சொல்வதற்குப் பதிலாக எலியும் புலியுமாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, பின்னர் சுதாரித்து எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் என்றார்.

பிரேமலதா

தொடர்ந்து பேசிய அவர், ``இங்கே சி.பி.ஆர் நிற்கிறார். அவர் முகத்தில் நரேந்திர மோடியைப் பார்க்க வேண்டும், எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும்; புரட்சித் தலைவி அம்மாவைப் பார்க்க வேண்டும் ; கேப்டனைப் பார்க்க வேண்டும். இந்தக் கூட்டணி  தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றும்  கூட்டணி. ஆகையால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.  செய்வீர்களா? எதிர் அணியை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா? என ஜெயலலிதா ஸ்டைலில் கர்ஜித்தார். ஜி.எஸ்.டி-யால்  இங்கு பிரச்னைகள் இருப்பதாக நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  வெற்றிபெறும் எம்.பி-க்கள் மூலம், ஜி.எஸ்.டி-யை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம் என்றவர், இறுதியாக உளறியதுதான் ஹைலைட்.  புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தவர் மோடி என்று சொல்வதற்குப் பதிலாக, புல்வாமா தாக்குதலை நடத்திய தைரியம் மிக்க பிரதமர் மோடி என்று உளறினார். 

இன்றுவரை பிரதமர் யார் என்பதைச் சொல்ல முடியாமல் தி.மு.க கூட்டணியினர்  முழிக்கிறார்கள். மம்தாவா... சோனியாவா... பிரியங்காவா... அல்லது ராகுலா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.  ஆனால், நாங்கள் மோடிதான் பிரதமர் என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லி  பிரசாரம் செய்கின்றோம். ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று வைத்துக்கொண்டாலும் ராகுல் காந்திக்கும்  மோடிக்கும்  மடுவிற்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கொண்டது நமது கூட்டணி. அவர்கள்  கூட்டணியில் நிர்வாகிகள் மட்டும்தான் இருக்கின்றனர். தாமரை சின்னம் லட்சுமிக்கு இணையான சின்னம். தாமரை சின்னத்தில் சி.பி.ஆருக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறவைக்க வேண்டும்" என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க