பழங்குடியினர் கிராமத்தில் தூங்கிய வேட்டைத் தடுப்புக் காவலர்கள் - `மாவோயிஸ்ட்’ எனச் சுற்றி வளைத்த போலீஸ் | Anti poaching watchers rounded by police

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (29/03/2019)

பழங்குடியினர் கிராமத்தில் தூங்கிய வேட்டைத் தடுப்புக் காவலர்கள் - `மாவோயிஸ்ட்’ எனச் சுற்றி வளைத்த போலீஸ்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆயுதங்களுடன் ரோந்துக்கு வந்து தூங்கிய வேட்டைத் தடுப்புக் காவலரை மாவோயிஸ்ட் என நினைத்து போலீஸார் சுற்றி வளைத்தனர்.

\மாவோயிஸ்ட் வேட்டை

வனப் பகுதிகள் நிறைந்த மூன்று மாநில எல்லைப் பதிகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகக் கேரள எல்லையையொட்டிய வயநாடு பகுதியில் ஜலீல் என்ற மாவோயிஸ்ட்டை கேரள போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் சமயம் என்பதால் தமிழகக் கேரள எல்லையையொட்டியுள்ள வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 7 பேர் வனப்பகுதிவழியாக துப்பாக்கியுடன் ரோந்து சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகேயுள்ள கோட்டக்கல் பழங்குடியினர் கிராமத்திற்குள் வந்துள்ளனர். இரவு நேரம் திரும்பிச் செல்லும் போது காட்டுயானைகள் வரக்கூடும் என்பதால் அவர்கள் அங்கேயே வனப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்திற்குள் தங்கிவிட முடிவு செய்துள்ளனர். மேலும், அருகில் இருந்த பழங்குடி கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவு கேட்டுள்ளனர். கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த இவர்களைக் கண்டு அஞ்சி உணவு சமைத்துக் கொடுத்துள்ளனர்.

பழங்குடி மக்கள் கொடுத்த உணவினைச் சாப்பிட்டு அருகில் இருந்த காலியான குடியிருப்பு ஒன்றில் ஏழு பேரும் தூங்குவதற்காகச் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட பழங்குடியினமக்களில் ஒருவர் இவர்கள் மாவோயிஸ்ட்டாக இருக்ககூடும் என்ற சந்தேகத்தில் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பளர் சண்முகபிரியா தலைமயில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கொலக்கொம்பை போலீஸார் ஆயுதங்களுடன் சென்று அவர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.  

தூங்கிக்கொண்டிருந்த வனத்துறையினர் ஆயுதங்களுடன் நின்ற போலீஸாரைப் பார்த்து பயந்து நின்றனர். பின்னர் அவர்களை கொலக்கம்பை போலீஸார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வனத்துறை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என்றும், ரோந்துப் பணிக்கு வந்து நேரமாகிவிட்டதால் தங்கியதாகவும் தெரிவித்தனர். பழங்குடி மக்களிடம் உணவினை எதற்காக மிரட்டிக் கேட்டீர்கள் எனக் கண்டித்தார் எஸ்.பி. அதன் பிறகு போலீஸார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா கோவை மாவட்ட வனப்பாதுகாவலரை போனில் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.