``தி.மு.க-வுக்கு இதுதான் கடைசித் தேர்தல்!" - துணை முதல்வர் ஓ.பி.எஸ் காட்டம் | This is the last election for DMK - Deputy Chief Minister O.Panner selvam

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:41 (30/03/2019)

``தி.மு.க-வுக்கு இதுதான் கடைசித் தேர்தல்!" - துணை முதல்வர் ஓ.பி.எஸ் காட்டம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், ஒரே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரங்களை மேற்கொள்வதால்,  தமிழக வீதிகளில் அரசியல் அனல் பறக்கிறது.

ஓ.பி.எஸ்

அந்த வகையில், அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர்.இளங்கோவனை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திருச்சியின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்று காலைமுதல் அவர், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பின், அங்கிருந்து கிளம்ப காலதாமதம் ஆனதால், திருச்சியில் பிரசாரம் திட்டமிட்டபடி நடத்த முடியாமல்போனது.

ஓ.பி.எஸ் வருகைக்காக திருச்சி திருவெறும்பூர், மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள், மாலை 6 மணிக்கே ஆட்களைத் திரட்டிக்கொண்டு வந்தனர். ஒருவழியாக 9.45 மணிக்கு திருச்சி திருவெறும்பூர் வந்தார் ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ். பிரசாரம்

அங்கு அவர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் எம்.பி-யுமான குமார் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும் எம்.பி-யுமான ரத்தினவேல், லோக்கல் அமைச்சர்கள் நடராஜன் ,வளர்மதி ஆகியோர் முன்னிலையில் தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர்.இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஓ பன்னீர்செல்வம்,  ``மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் நமது மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை நிறைவேற்றவும், நிறைவாகச் செய்யவும் காத்திருக்கிறார் நமது வெற்றி வேட்பாளர் இளங்கோவன்.

ஜெயலலிதா தமிழக முதல்வராக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. ஜெயலிதாவின் அனைத்து திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மதப்பிரச்னை, சாதிப் பிரச்னை இல்லாமல், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாகவும் அமைதியாகவும் தமிழகம் திகழ்கிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க காணாமல்போகும் என்கிறார். இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்குப் பிறகு யார் காணாமல் போவார்கள் என்பது தெரியும்.

துணை முதல்வர் ஓபிஎஸ்

யாருடைய ஆட்சியில் அமைதியாய், மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள் என்பது மக்களுக்கே வெளிச்சம். இந்தத் தேர்தலோடு, தி.மு.க-வுக்கு இறுதி, நிறைவுத் தேர்தல்” என்றார்.

திருவெறும்பூர் பிரசாரம் முடித்துவிட்டு ஓ.பி.எஸ் கிளம்பும்போது, இரவு 10 மணியைக் கடந்ததால், அடுத்து திருச்சி மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய முடியாமல் கையசைத்தபடி சென்றார். இதனால், தொண்டர்களும்  நிர்வாகிகளும் படு அப்செட் ஆனார்கள்.