`ஏழு வருஷமாச்சு, சாவுக்கு நீதி கிடைக்கல!'- நினைவுநாளில் கண்கலங்கும் ராமஜெயம் ஆதரவாளர்கள் | kn ramajayam followers paying homage on 7th memorial day

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:07 (29/03/2019)

`ஏழு வருஷமாச்சு, சாவுக்கு நீதி கிடைக்கல!'- நினைவுநாளில் கண்கலங்கும் ராமஜெயம் ஆதரவாளர்கள்

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 7 வருடங்கள் கடந்துவிட்டன. ராமஜெயம்  திருஉருவசிலைக்கு மாலை அணிவித்த அவரது ஆதரவாளர்கள் திருச்சியில், விழியிழந்தோர் பள்ளி மற்றும் முதியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கிவருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், போலீஸுக்கு எதிராகப் பொங்கித் தீர்த்தார்கள்.

ராமஜெயத்தின் சிலைக்கு கே.என்.நேரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி அதிகாலை, திருச்சி தில்லை நகர் பகுதியில் வாக்கிங் சென்றபோது, திருச்சி திருவளர்ச்சோலை அருகே அவரது உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கை, மாநகர போலீஸார், சிபிசிஐடி விசாரித்தனர்.  விசாரணையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால், ராமஜெயத்தின் மனைவி லதா சிபிஐ விசாரணை கோரி, கடந்த ஆண்டு 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துக் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.  அதிலிருந்து இன்றுவரை சிபிஐ-யும் விசாரணை நடத்திவருகிறது. ஆனால், கொலைக்கான துருப்புச்சீட்டைக்கூட கண்டுபிடிக்கவில்லை. 

ராமஜெயம் சிலைக்கு திருமாவளவன் அஞ்சலி

இந்நிலையில், இன்று  ராமஜெயத்தின் 7-ம் ஆண்டு நினைவு நாள். இதையொட்டி, ராமஜெயம் நினைவாக திருச்சி முழுக்க 'கொடைவள்ளல் ராமஜெயம்', 'திருச்சி மாநகர தி.மு.க கோட்டையின் முதன்மைக் காவலரே!' 'கல்விக் கண் திறந்த கடவுளே', 'மனிதக் கடவுளுக்கு நினைவஞ்சலி' என அவரது ஆதரவாளர்கள். திருச்சி மாநகர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

ராமஜெயத்தின் நினைவு நாளான இன்று, அவரது அண்ணனும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, அவரது குடும்பத்துக்குச்  சொந்தமான திருச்சி-திண்டுக்கல் சாலையில் இயங்கிவரும் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள, ராமஜெயம்  திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார்.  அவரைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஐஜேகே கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், ராமஜெயத்தின் ஆதரவாளர்கள் மரியாதை செலுத்திவருகின்றனர். மேலும் ராமஜெயத்தின் ஆதரவாளர்கள், திருச்சி விழியிழந்தோர் பள்ளி மற்றும் முதியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கியும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கியும், ராமஜெயம் நினைவு நாளை அனுசரித்துவருகின்றனர்.

ராமஜெயத்தின் ஆதரவாளர்கள் அன்னதானம் வழங்கினர்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராமஜெயம் ஆதரவாளர்கள் நம்மிடம், "ராமஜெயம்  கொலை வழக்கை, நாட்டில் இருக்கிற எல்லா போலீஸும் விசாரிச்சிட்டாங்க. சாவுக்கு ஏதேதோ கதைகளை இட்டுக்கட்டினார்கள். இதுவரை அந்தக் கொலை வழக்கில் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகக் காவல்துறையிடம் விசாரணை இருந்தால் ஒண்ணும் நடக்காதென்று, நீதிமன்றத்தில் போராடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றினார்கள். அவர்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே வைத்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே, இந்த வழக்கு முடியக் கூடாது என்பதில் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. ஏழுவருஷமா  ராமஜெயம் சாவுக்கு நீதி கிடைக்குமென்று காத்திருக்கிறோம். ஒண்ணும் நடக்கல. விரைவில் ஆட்சி மாற்றம் வரும். கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்" என்றார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க