`இடுப்பில் மறைத்துவைக்கப்பட்ட ரூ.52.5 லட்சம்!'- சோதனையில் அதிர்ந்த பறக்கும் படையினர் | Money caught in nagercoil by election flying squad

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:41 (30/03/2019)

`இடுப்பில் மறைத்துவைக்கப்பட்ட ரூ.52.5 லட்சம்!'- சோதனையில் அதிர்ந்த பறக்கும் படையினர்

நாகர்கோவிலில், அரசு பேருந்தில் வந்த இரண்டு பேர், இடுப்பில் மறைத்து எடுத்துவந்த ரூ.52.5 லட்சத்தைத் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.

பணம் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணம் இன்றி எடுத்துச்செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நாகர்கோவிலை அடுத்த தேரேகால்புதூர் பகுதியில், தேர்தல் பறக்கும்படையைச் சேர்ந்த தாசில்தார் சரஸ்வதி தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சியிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனைசெய்தனர்.

பணம்

அதில், மதுரையைச் சேர்ந்த கனகராஜ், தனது இடுப்பில் மறைத்து வைத்து ரூ.22.5 லட்சம் எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல,  திண்டுக்கல்லைச் சேர்ந்த முகம்மது ஹனீபா என்பவர் ரூ.30 லட்சத்தை இடுப்பில் மறைத்து எடுத்துவந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்தப் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல்செய்தனர். பறிமுதல்செய்யப்பட்ட பணம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அணில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.