அ.தி.மு.க., தி.மு.க. ரூ.500, டி.டி.வி ரூ.300!- தேர்தல் பணப்பட்டுவாடா வீடியோ  | Money distribution by all parties for election

வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:41 (30/03/2019)

அ.தி.மு.க., தி.மு.க. ரூ.500, டி.டி.வி ரூ.300!- தேர்தல் பணப்பட்டுவாடா வீடியோ 

தேர்தல் பிரசாரத்துக்கு பணபட்டுவாடா

அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மக்கள் கூட்டத்தைக் காண்பிக்க மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களும் தினக்கூலி தொழிலாளர்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 

 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளிவீசியபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்காக வீதி, வீதியாக வரும் வேட்பாளர்களைச் சுற்றி ஒரு கூட்டமே செல்வதுண்டு. இவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியினரையும் கூட்டத்தைக் காண்பிக்க அழைத்துச் செல்லப்படுவோரையும் கவனிக்கப்படுவதுண்டு. 

இந்தக் கவனிப்பு கட்சிக்குக் கட்சி வித்தியாசப்படும். வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் சில வேட்பாளர்கள் ஈடுபடுவதுண்டு. இந்தவகையில் மத்திய சென்னை பா.ம.க. வேட்பாளர் சாம்பால், ஜிம் பாய்ஸ்களைக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு தினமும் 500 ரூபாய், பிரியாணி, மது கொடுக்கப்படுகிறது. டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு தினமும் 300 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களும் கட்டடத் தொழிலாளர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். 

தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்கள்

வடசென்னைக்கு டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது கூட்டத்தைக் காண்பிக்க அழைத்து வரப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா நடந்தது. அதை ரகசியமாக வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது. இந்த வீடியோ குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விசாரித்துவருகின்றனர். இதுபோன்ற வம்புகளில் சிக்கிக் கொள்ளாமலிருக்க அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வினர் முன்எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.  

பிரசாரத்துக்கு வருவோர்களின் பெயர்கள், செல்போன் நம்பர்களை வாங்கிக் கொண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மொத்தமாக  பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடுகிறது. அவர் மூலம் அந்தப் பணம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அதுதொடர்பாக யாராவது கேள்வி கேட்டால் இது சுயஉதவிக்குழு கணக்கு என்று பதிலளிக்கப்படுகிறது. இதனால் தேர்தல் பறக்கும் படையினராலும் மாற்றுக் கட்சியினராலும் எதுவும் செய்யமுடியவில்லை. 

இதுகுறித்து பிரசாரத்துக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``வீட்டிலிருந்து வேனில் பிரசாரம் செய்யும் இடத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். அப்போது ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுவினரும் யூனிபார்ம் சேலையை அணிந்து செல்வோம். அங்கு கொடுக்கும் கட்சிக் கொடிகளை பிடித்துக்கொண்டு வரவேற்பு அளிப்போம். பிரசாரம் முடிந்ததும் மீண்டும் வாகன ஏற்பாடு செய்துவிடுவார்கள். ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பார்கள். அதை நாங்கள் பிரித்துக் கொள்வோம்'' என்றனர்.  

தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை தினக்கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களையும் கட்சியினர் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திவருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினரிடமிருந்து தப்பிக்க வேலைக்குச் செல்வது போல வாகனத்தில் பிரசாரம் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுக்குரிய கூலி, பிரசாரம் முடிந்தவுடன் வழங்கப்படுகிறது. அதனால் கட்டடப் பணிகளுக்கும் இதர பணிகளுக்கும் கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. 

பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லப்படும் ஆண்களுக்கு மதுவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் பிரசாரத்துக்குச் செல்ல ஆண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். பணம், பிரியாணி, மது எனத் தேர்தல் பிரசாரம் ஒவ்வொரு பகுதியிலும் களைகட்டுகிறது. இதற்காக தனியாக குறிப்பிட்ட தொகை நிர்வாகிகளுக்கு வேட்பாளர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் தாராளமாகப் புழங்குகின்றன. டீ கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் 500 ரூபாய் நோட்டுகளின் வரத்து அதிகமாகியுள்ளன. இதனால் சில்லறைத் தட்டுப்பாடு குக்கிராமங்களில் ஏற்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தையொட்டி கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை வெள்ளை சர்ட்டும் வேட்டியும் எனக் காலையிலேயே கிளம்பிவிடுகின்றனர். அவர்களின் சட்டைப் பாக்கெட்டில் கரன்சியோடு கட்சித் தலைவர்களின் போட்டோவும் இருக்க முகத்தில் மகிழ்ச்சி காணப்படுகிறது.

 தேர்தல் என்றாலே ஜனநாயகத் திருவிழாவும்தானே...