``தம்பிதுரைக்கு ஓட்டு போடமாட்டோம்!"- ஜோதிமணியிடம் தீர்மானம் போட்டுக்கொடுத்த கிறிஸ்தவர்கள் | "We're not going to vote for thambidurai!" - Christian churches resolution!

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:42 (30/03/2019)

``தம்பிதுரைக்கு ஓட்டு போடமாட்டோம்!"- ஜோதிமணியிடம் தீர்மானம் போட்டுக்கொடுத்த கிறிஸ்தவர்கள்

தீர்மானத்தை படிக்கும் ஜோதிமணி

"கடந்த 5 வருஷமா மோடி ஆட்சியில் எங்க மக்கள்பட்ட இன்னல்களைச் சொல்லி மாளாது. அதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தேவாலயங்களைச் சேர்ந்த யாரும், கரூர் தொகுதியில் ஓட்டளிக்க மாட்டோம்" என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிரதானக் கட்சிகள் எல்லாம், மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கின்றன. தங்களது வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி, பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் மறுபடியும் தம்பிதுரையே களமிறங்கியிருக்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் ஒதுக்கப்பட்டதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி களமிறக்கப்பட்டிருக்கிறார். அ.ம.மு.க சார்பில் தங்கவேல் களத்தில் இருக்கிறார். மூவரும் டாப் கியரில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

ஜோதிமணியோடு கிறிஸ்தவவர்கள்...

இந்நிலையில், கரூரைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் சிலர், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தங்கள் கைகளில் இருந்த ஒரு தீர்மானத் தாளை ஜோதிமணியிடம் வழங்கினார்கள். ஜோதிமணியிடம் பேசிய அவர்கள்,  "நாங்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ தேவாலங்களில் தொண்டூழியம் செய்பவர்கள். கடந்த ஐந்து வருட மோடி ஆட்சியில் நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம். பலவழிகளில் அந்த ஆட்சியில் இருந்தவர்கள் எங்களை நசுக்கினார்கள். சொல்லமுடியாத துயர்களுக்கு ஆளானோம். அதனால், 'இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறுபடியும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஜோதிமணி வெற்றிக்காக பிரார்த்தனை...

இந்தியா முழுக்க இந்த நிலைதான் உள்ளது. அதனால், 'கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க-வை கூட்டணியில் வைத்துள்ள அ.தி.மு.க-வின் வேட்பாளர் தம்பிதுரைக்கு ஓட்டளிக்க மாட்டோம்'னு தீர்மானம் போட்டிருக்கிறோம். கரூர் மாவட்டத்தில், குறைந்தப்பட்சம் 200 தேவாலயங்கள் இருக்கின்றன. எல்லோரும் இதையே முன்மொழிஞ்சிருக்காங்க. எங்க மக்களிடம் இதையே தொடர்ந்து வலியுறுத்தி, கேன்வாஸ் பண்ணலாம்னு இருக்கோம்" என்றார்கள். அவர்களுக்குப் பதிலளித்த ஜோதிமணி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மைனாரிட்டி மக்களுக்குக் காவலனாக இருக்கும்" என்றார். தொடர்ந்து, ஜோதிமணி வெற்றிபெற வேண்டும் என்று வலியுறுத்தி, அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள்.