`ரகசியமாக கடவுளைக் கும்பிடுறாங்களே?!'- பிரசாரத்தில் கனிமொழியைச் சாடிய தமிழிசை | thamilisai slams kanimozhi during campaign

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:43 (30/03/2019)

`ரகசியமாக கடவுளைக் கும்பிடுறாங்களே?!'- பிரசாரத்தில் கனிமொழியைச் சாடிய தமிழிசை

”பிரதமர் மோடியை மோசடி என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். மோசடிப் பேர்வழிகள் எல்லாம் மோடியை மோசடி என்று சொல்லக் கூடாது. தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசப்பட்டார்.

தமிழிசை பிரசாரம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவில்பட்டி அருகிலுள்ள கழுகுமலைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு முன்பாக, கழுகாசலமூர்த்தி கோயிலில் சுவாமி தரிசனம்செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இறை நம்பிக்கையே இல்லை. தாங்கள்  பகுத்தறிவாளர்கள் என்று தி.மு.க-வினர் சொல்லிக்கொண்டு, எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் பார்க்கின்றனர். ரகசியமாக யாருக்கும் தெரியாமல் கடவுளைக் கும்பிட்டுவிட்டு, தனக்கு வேண்டிய அருள் மட்டும் கிடைத்தால் போதும், தொண்டர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கக் கூடாது என நினைக்கிறார்கள்.

தன் வீட்டுப் பிள்ளைகள் டெல்லிக்குச்  செல்ல இந்தி, ஆங்கிலம் படித்துக்கொள்ளலாம். ஆனால், தன் ஏழைத் தொண்டர்கள் முன்னேறக் கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நடவடிக்கை. கனிமொழி தனது தேர்தல் பரப்புரையில், பல பொய்யான செய்திகளைக் கூறிவருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனையைத் தற்போது, தி.மு.க கட்டித் தரும் என்று கனிமொழி கூறிவருகிறார். இத்திட்டத்திற்காக பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்னும் 48 மாதங்களில் முடிவுபெற்று, பயன்பாட்டிற்கு வரவுள்ளது. காங்கிரஸ், தி.மு.க 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி இருக்கும்போது எய்ம்ஸ் குறித்த சிந்தனை வரவில்லையா, தற்போதுதான் வருகிறதா?

தூத்துக்குடியில் கனிமொழி பிரசாரம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது, இவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். காங்கிரஸ்-தி.மு.க ஆட்சியின் துணையோடுதான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் நடத்தப்பட்டது என்று ராஜபக்‌ஷே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு, கனிமொழி என்ன பதில் சொல்லப்போகிறார். ராஜபக்‌ஷேவை சந்தித்து, சிரித்துப் பரிசு வாங்கி வந்துவிட்டு, 'தமிழர்களை பாதுகாப்போம்' என்று சொன்னால், தமிழ் மக்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். பிரதமர் மோடியை மோசடி என்று சொல்லியிருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். மோசடிப் பேர்வழிகள் எல்லாம் மோடியை மோசடி என்று சொல்லக் கூடாது. தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த ஸ்டாலினைக் கண்டிக்கிறோம். மோடியை மோசடி என்று சொன்னாலும், என்ன சொன்னாலும் தமிழ் மக்கள் உங்களை நம்பப் போவதில்லை. நீங்களும் முதல்வராக வர முடியாது. நீங்கள் சிபாரிசு செய்யும் ராகுல் பிரதமராக வர முடியாது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க