''ஒரு குடும்பத்துக்கு தி.மு.க சொந்தம் அல்ல!''- உதயநிதி குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில் | No dynasty in DMK, - says stalin

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:08 (30/03/2019)

''ஒரு குடும்பத்துக்கு தி.மு.க சொந்தம் அல்ல!''- உதயநிதி குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்

க்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான  உதயநிதியும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஸ்டாலினுக்கு அடுத்து தி.மு.க தலைமைப் பதவியை உதயநிதி பிடிப்பார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கையில் தி.மு.க சென்றுகொண்டிருப்பதாக பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.  

உதயநிதி ஸ்டாலின்

அப்போது ஸ்டாலின், ''அரசியலுக்குள் நுழையும்போது எனக்கு 14 வயது. தற்போது, 65 வயதில்தான் தி.மு.க தலைவராகியுள்ளேன். திறமையையும் உழைப்பையும் முன்னிறுத்தியே தி.மு.க-வில்  வாய்ப்பு வழங்கப்படுகிறது. கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோருக்கு திறமையின் அடிப்படையில்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. என் மகன் உதயநிதி  கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. மற்றவர்கள் போலவே அவரும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எந்த ஒரு விஷயத்திலும் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கிறேன். 

ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. கருணாநிதி மறைவுக்குப் பிறகும் தி.மு.க பலத்துடன் உள்ளது. சிறுவயதில் இருந்தே கருணாநிதி என் உழைப்பை அங்கீகரித்துவந்துள்ளார். தி.மு.க, ஒரு குடும்பத்துக்கு சொந்தம் இல்லை. இந்தக் கட்சி திராவிடக் கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அ.தி.மு.க - பாரதிய ஜனதா கூட்டணி பலமான கூட்டணி போல தெரிந்தாலும், உண்மை, நம்பிக்கையின் அடிப்படையில் உருவான கூட்டணி அல்ல. மத்தியில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி  பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க கட்சியை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது. பா.ம.க இந்தக் கூட்டணியுடன் பிசினஸில் ஈடுபட்டுள்ளது. பிரசாரத்திற்குச் சென்ற இடங்களில், பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பதை என்னால் காண முடிந்தது''  என்று கூறினார். 

எனினும், அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்வைத்தே உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில், உதயநிதி ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க