`சுவையான மோரை எப்படித் தயாரிப்பது?' - சமையற்கலை நிபுணர் லஷ்மி ஸ்ரீனிவாசன் தரும் டிப்ஸ் | How to prepare tasty Butter milk

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (29/03/2019)

கடைசி தொடர்பு:14:47 (29/03/2019)

`சுவையான மோரை எப்படித் தயாரிப்பது?' - சமையற்கலை நிபுணர் லஷ்மி ஸ்ரீனிவாசன் தரும் டிப்ஸ்

டிக்கிற வெயிலுக்கு, இன்னும் பல மாதங்களுக்கு மோர்தான் நம் சாப்பாட்டில் ஹீரோவாக இருக்கும். அதை முறைப்படி எப்படித் தயாரிப்பது என சொல்லித்தருகிறார், சமையற்கலை நிபுணர் லஷ்மி ஸ்ரீனிவாசன்.

மோர்

"ஃபுல் க்ரீம் கொண்ட பாலில்தான் நிறைய மோர் கிடைக்கும். அதனால், அதையே வாங்குங்கள். பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, துளிகூட அடிப் பிடிக்காத அளவுக்கு  பொங்கப்பொங்க காய்ச்ச வேண்டும். பால்,  துளியளவு அடிப் பிடித்துவிட்டாலும் மோரில் தீய்ந்த வாடை வந்துவிடும்.

லஷ்மி ஶ்ரீனிவாசன்காய்ச்சிய பால் நன்கு ஆறியதும், அதன் மேல் படிந்திருக்கும் பாலாடையை நீக்கிவிட்டு, முந்தைய நாள் உறைவிட்ட தயிர் அல்லது மோரில் சில துளிகளைச் சேர்க்கவும்.  உறைவிடுகிற தயிர் அல்லது மோரில் உப்பு சேர்த்திருக்கக் கூடாது. பிறகு, உறைவிட்ட பாலை, டீக்கடையில் ஆற்றுவதைப்போல சற்று வேகமாக ஆற்றி மூடி வைக்கவும். எக்காரணம் கொண்டும் உறையை பாலில் விட்டுவிட்டு, அப்படியே அந்தப் பாத்திரத்தை மூடிவைத்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால், தயிர் சரியாக உறையாது.

இது வெயில்காலம் என்பதால், காலையில் உறைவிட்டால் மதியத்துக்குள் தயிர்  உறைந்துவிடும். இதை மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். ஒரு கப் அடித்த தயிருக்கு 4 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்தால், ருசியான மோர் ரெடி. 

மோரில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு  தாளித்தால் மணமாக இருக்கும்.  ஆனால், தூள் பெருங்காயம் போட்டால் மோரின் மேலே அது திப்பி திப்பியாக நிற்கும். அதனால், சிறிய பெருங்காயத்துண்டை சிறிதளவு நீரில் கரைத்து, மோருடன் கலந்துவிடுங்கள். இதற்குப் பதில், நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சித்துருவல்  ஆகியவற்றையும் மோருடன் கலக்கலாம். ஃப்ளேவர்டு மோர் வேண்டுமென்றால், ஒரு லிட்டர் மோருக்கு அரை துண்டு பச்சை மிளகாய், 5 புதினா இலைகளை அரைத்து, மோருடன் கலந்துகொள்ளுங்கள்.

கடைசியாக ஒரு தகவல், அன்றைக்குத் தயாரித்த மோரை அன்றைக்கே பயன்படுத்திவிடுங்கள். மறுநாள், பழைய மோரின் நிறம் மாறி, புளிக்க ஆரம்பித்திருக்கும். அதில் ருசியும் இருக்காது. வயிற்றுக்கும் நல்லதில்லை."