உட்கட்சி பூசலால் விழிபிதுங்கும் வேட்பாளர்!- ஒத்துழைத்தால் வெற்றி உறுதி  | Fight inside the DMK and Congress parties, candidate upset

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:55 (30/03/2019)

உட்கட்சி பூசலால் விழிபிதுங்கும் வேட்பாளர்!- ஒத்துழைத்தால் வெற்றி உறுதி 

வேட்பாளர் ஜெயக்குமார்


திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. இது, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை திருவள்ளூர் தொகுதியைப் பெற தி.மு.க-வினர் காயை நகர்த்தினர். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திருவள்ளூர் தொகுதியைப் பெற முயற்சி செய்தனர். ஆனால், செயல் தலைவர் டாக்டர் ஜெயக்குமாரை திருவள்ளூர் தொகுதியின் வேட்பாளராக கட்சித்தலைமை அறிவித்தது. இதனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். 

இந்த நிலையில், தொகுதி கைவிட்டுப் போனதால் தி.மு.க.வினரும் அப்செட்டில் உள்ளனர். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வேணு, நாசர் ஆகியோர் வேறு தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணத்தில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனுக்கு பிரசாரம் செய்ய மாவட்டச் செயலாளர் வேணு, தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்றுவிட்டார். தெற்கு மாவட்டச் செயலாளர் நாசர், பூந்தமல்லி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்காக தேர்தல் வியூகம் அமைத்துவருகிறார்.

வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து   பேசும் ஸ்டாலின்

இதனால், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தன்னுடைய கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் காக்களூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அன்றைய தினம் மட்டும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வந்தனர். அதன்பிறகு  அவர்கள் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வேட்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, ``தி.மு.க-வினர் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். நான் இன்னும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. வி.ஐ.பி-க்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன். இன்றுதான் கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வேணும் நாசரும் எந்நேரமும் என்னுடன் இருக்க முடியாது. தி.மு.க-வினர் எனக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற தகவலை அ.தி.மு.க-வினர் பரப்பிவருகின்றனர். அதில் உண்மையில்லை" என்றார். 

 தி.மு.க. தரப்பில் கேட்டதற்கு, ``திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வில் கடும் உட்கட்சி பூசல் நிலவிவருவது உண்மைதான். மாவட்டச் செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களை மட்டுமே வேட்பாளர் சந்தித்து வருகிறார். அதனால் தி.மு.க-வினரின் முழு ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்காத சூழல் நிலவுகிறது. திருவள்ளூர் தொகுதியில் உள்ள இரண்டு மாவட்டச் செயலாளர்களும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருடன் இல்லை. பெயருக்கு ஒருசில தி.மு.க-வினர் மட்டும் வேட்பாளருடன் உள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு வேட்பாளர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமைக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் அங்கிருந்து பேசிய தலைமைக் கழக நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்படுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகும் எந்தவித மாற்றமும் இல்லை. காக்களூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் ஜெயக்குமார் தூங்கிய வீடியோ தொகுதியில் வலம் வருகிறது. பாரபட்சமின்றி வேட்பாளர் தரப்பினர் செயல்பட்டால் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற முடியும்" என்றனர் ஆதங்கத்துடன். 

 வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து  பேசும் ஸ்டாலின்

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்டதற்கு, ``தி.மு.க-வில் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலும் கடும் உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. அதையெல்லாம் சமாளித்து வெற்றி பெற வேண்டிய சூழலில் வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளார். உள்ளூர் நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ், தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். தி.மு.க. தரப்பிலிருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைத்தால் கண்டிப்பாக திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெறுவோம்" என்றனர். 

தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``திருவள்ளூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் பூந்தமல்லி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இதனால், தி.மு.க-வினர் இரண்டு தேர்தல்களிலும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க-வின் உட்கட்சி பூசல் காரணமாக வேட்பாளர் ஜெயக்குமார் இதுவரை என்னைப் போல தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. மு.க.ஸ்டாலினுக்காக அமைதியாக இருக்கிறோம். கடந்த முறை விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் போட்டியிட்டபோதும் தி.மு.க-வினர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுபோல இந்த முறையும் உள்ளடி வேலை பிரசாரத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. அதை வேட்பாளர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது அவரின் கையில்தான் இருக்கிறது" என்றார்.  

மாவட்டச் செயலாளர் நாசர்

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி சிதம்பரத்திடம் பேசினோம். ``வேட்பாளர் ஜெயக்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர் என்ற தகவல் உள்ளது. ஆனால், அவரின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் உள்ள கிராமம். இதனால்தான் அவருக்கு திருவள்ளூரில் சீட் கிடைத்தது. மேலும், கட்சித் தலைமையிலும் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. திருமணம் செய்துகொள்ளாமல் மக்களுக்காகவே சேவை செய்துவருகிறார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திருவள்ளூர், மாதவரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். ஆவடி தொகுதியில் நாசர் மூலமாகவும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வேணு மூலமாகவும் வேட்பாளருக்கு ஓட்டுக்கள் கிடைத்துவிடும். பூந்தமல்லி தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் அங்கேயும் ஜெயக்குமாருக்கு ஓட்டுக்கள் விழுந்துவிடும். அதோடு நரேந்திரமோடிக்கு எதிரான அலை வீசுவதால் நிச்சயம் திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமார் வெற்றி பெறுவார். வி.ஐ.பி-க்கள் சந்திப்பு, செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். அதன்பிறகுதான் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு பிரசார சுற்றுப்பயணத்தை திட்டமிட உள்ளோம். ஆனால், அதற்குள் தி.மு.க-வினர் வேட்பாளருக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற வதந்தி பரபரப்பட்டுவருகிறது" என்றார்.