`அனைவருக்கும் பிரியாணி இருக்கு!’ - அறிவித்த அடுத்த நொடியே அ.தி.மு.க கூட்டத்தில் தள்ளுமுள்ளு | Briyani issued in coonoor AIADMK Candidate meeting

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:55 (30/03/2019)

`அனைவருக்கும் பிரியாணி இருக்கு!’ - அறிவித்த அடுத்த நொடியே அ.தி.மு.க கூட்டத்தில் தள்ளுமுள்ளு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பிரியாணிக்காகத் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீலகிரி தனித் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அவினாசியைச் சேர்ந்த தியாகராஜன் களமிறங்குகிறார். தி.மு.க - அ.தி.மு.க நேரடி போட்டியில் இருந்தாலும் அ.தி.மு.க இதுவரை நீலகிரித் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கவில்லை .இந்த நிலையில், நீலகிரித் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் அ.தி.மு.க நீலகிரித் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. செயல் வீரர்கள் கூட்டம் என்பதால் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக்கட்சிகயைச் சேர்ந்தவர்களும் காலை 10 மணிக்கே வந்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவையைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் 11.30 மணிக்கு வந்தனர். பிற்பகல் 1.30 மணி வரை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 500 பேர் வந்திருந்தனர். மைக்கில் பேசிய அ.தி.மு.க நிர்வாகி, `அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். அப்போது வேட்பாளர் தியாகராஜன் ஏற்புரை வழங்கிக்கொண்டிருந்தார். அறிவித்த அடுத்த நிமிடமே கூட்டம் மெல்ல வெளியே நகரத் தொடங்கியது. தொண்டர்கள் அனைவரும் ஹோட்டல் ஷட்டர் திறக்கும் முன்பே கூடிவிட்டனர். 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்ததே 500 பேர்தான். ஆனால், பிரியாணிக்கு பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடைசியில் கூட்டம் டைனிங் ஹால் நோக்கி நகர வேட்பாளரைக்கூட பொருட்படுத்தாது நெரிசலில் தள்ளினர். கடைசியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் யாரும் சாப்பிடாமலேயே நெரிசலில் தப்பி காரில் ஏறிச் சென்றனர்.