``நாங்க கொடுக்கும் கிஃப்ட் பாக்ஸால் குழந்தைகள் பலமாக பிறக்கின்றன!”- முதல்வர் எடப்பாடி பிரசாரம் | CM EPS' election campaign in Viluppuram district

வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:56 (30/03/2019)

``நாங்க கொடுக்கும் கிஃப்ட் பாக்ஸால் குழந்தைகள் பலமாக பிறக்கின்றன!”- முதல்வர் எடப்பாடி பிரசாரம்

``நாங்க கொடுக்கும் கிஃப்ட் பாக்ஸால் குழந்தைகள் பலமாக பிறக்கின்றன” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருக்கிறார். 

முதல்வர் எடப்பாடி பிரசாரம்

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி இன்று பிரசாரத்தை மேற்கொண்டார். இன்று காலை செஞ்சியில் பேசிய அவர், ``விவசாயிகள் நலன் காக்க பல்வேறு முயற்சிகளை அம்மாவின் அரசு மேற்கொண்டு வருகிறது. மனிதனுக்கு எப்படி உயிர் முக்கியமோ அதேபோல விவசாயிகளுக்கு நீர் முக்கியம். அந்த ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் இருப்பதற்காக, ஜெயலலிதாவின் அரசு நீண்ட காலத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். அதற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க மோடி அரசு செய்திருக்கிறது.

செஞ்சியில் முதல்வர் பிரசாரம்

நான் ஒரு விவசாயி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கரு வைத்தவுடன் அந்தக் கரு நன்றாக வளர வேண்டும். அதற்கான உதவித் தொகை 6,000 ரூபாயிலிருந்து 12,000 என உயர்த்தப்பட்டது. அந்தக் கரு வளரும்போது சில நேரங்களில் எடை குறைவாகப் பிறக்கின்றன. ஏனென்றால் கிராமத்தில் இருக்கும் தாய்மார்கள் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதில்லை. அம்மாவின் அரசு அதைக் கண்டறிந்து மருத்துவத்துறையின் ஆலோசனைப்படி 2,000 ரூபாய் இரண்டுமுறை கிஃப்ட் பாக்ஸ் தருகிறோம். அதில் இருக்கும் நெய், பேரீச்சம்பழம் உட்பட ஊட்டச்சத்து நிறைந்த பொருள்களை அந்த கர்ப்பிணித் தாய்மார்கள் சாப்பிடும்போது, அந்தக் குழந்தை பலமோடு, செழிப்போடு சுகப்பிரசவகாமப் பிறக்கிறது. இதை அம்மாவின் அரசுதான் செய்கிறது. இதன்மூலம் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பும், பிரசவ காலங்களில் தாய்மார்களின் இறப்பு சதவிகிதமும் குறைக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் பிரசாரம்

இளைஞர்களின் நலன் காக்க தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தி அதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படும். அதேபோல 100 நாள் வேலை வாய்ப்பு 200 நாள்களாக மாற்றப்படும். ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் ஒரு கட்சியின் கடமை. ஆனால் தி.மு.க அப்படி ஒன்றையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசை அணுகி மகனுக்கும், பேரனுக்கும் பதவி வாங்க மட்டும் தி.மு.கவுக்கு தெரிகிறது. 15 ஆண்டுக்காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க மக்களுக்கு செய்தது என்ன? காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்னையையும் இவர்கள் தீர்க்க முயற்சி செய்யவில்லை. அதனால் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க