`இப்பதான் என் மகள் நிம்மதியா இருக்கா!'- ஜீவஜோதியின் அம்மா தவமணி உருக்கம் | Jeeva Jothi's mother express happy about SC ruling on saravana bhavan raja gopal's case

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (29/03/2019)

கடைசி தொடர்பு:17:20 (29/03/2019)

`இப்பதான் என் மகள் நிம்மதியா இருக்கா!'- ஜீவஜோதியின் அம்மா தவமணி உருக்கம்

ஹோட்டல் சரவணபவன் ராஜகோபாலுக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு பற்றி ஜீவஜோதி என்ன நினைக்கிறார் என அறிய தஞ்சாவூரில் உள்ள அவரது கடைக்குச் சென்றோம். அங்கு அவர் அம்மா தவமணி இருந்தார். ``என் பொண்ணு இப்பதான் நிம்மதியா இருக்கா. தீர்ப்பு குறித்து பேசுவதற்கு அவள் வக்கீலுடன் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு ஜீவா தன் கருத்தை தெரிவிப்பாள்'' எனக் கூறினார்.

ஜீவஜோதி டெய்லர் கடை

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜாகோபாலுக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூரில் வசிக்கும் ஜீவஜோதியின் மனநிலை என்ன என்பதை அறிய அவரது வீட்டுக்குச் சென்றோம். தற்போது  ஜீவஜோதி என்ன செய்து கொண்டிருக்கிறார் என பார்ப்போம். சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட  பிறகு பல வகையில் துன்பங்களுக்கு ஆளான  ஜீவஜோதி வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்ததாக சொல்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள்.

``தண்டாயுதபாணி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். அவருக்கு பரணி என்ற ஆண் குழந்தை பிறந்து கொஞ்ச நாள்களில் இறந்தது இதில் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஜீவஜோதி எனக்கு எல்லாம் நெஞ்சில் இடி இறங்கும் அளவுக்கு நடக்கிறதே. அப்படி என்ன பாவம் செய்தேன் என இடிந்து போய் கணவர் தண்டாயுதபாணியிடம் கண்ணீர் விட்டு கதறியிருக்கிறார். பின்னர் அவர்தான் கவலைப்படாத ஜீவா, நாம  நல்ல வாழ்க்கை வாழுற காலம்  நிச்சயம் வரும் என்று தேற்றியிருக்கிறார். பின்னர் மெடிக்கல் காலேஜ் சாலையில் ஜீவா பேஷன்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கான டெய்லர் கடையைத் தொடங்கினார். இதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதால் அவர் மனதில் இருந்த அழுத்தங்களும் துயரங்களும் மெல்ல மறையத் தொடங்கின.

ஜீவஜோதியில் ஹோட்டல்

பின்னர் அவர் மகன் பரணியின் நினைவாக அதே பகுதியில் பரணி உணவகம் என்ற பெயரில் சைவ ஹோட்டலைத் தொடங்கினார். வாழ்க்கை ஓரளவுக்கு மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்க பிறகு பவின் கிஷோர் என்ற ஆண்குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளில் பரணி ஹோட்டலை மூடிவிட்டு டெய்லர் கடையை மட்டும் நன்றாக விரிவுபடுத்தி நடத்த தொடங்கினார். பிறகு மெடிக்கல் காலேஜில் இருந்த கடையை இடம் மாற்றி ரஹ்மான் நகரில் உள்ள அப்பார்ட்மென்டில் ஆரி உலகம் என்கிற பெயரில் மகளிருக்கான டெய்லர் கடையை நடத்தி வருகிறார். அவரின் கணவர் தண்டாயுதபாணி அப்பளம், ஊறுகாய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

ஜீவஜோதியின் ஹோட்டல்

சொந்தமாக வீடுகட்டி குடியேறியவர் பின்னர் அதை வாடகைக்கு விட்டுவிட்டு ரஹ்மான் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அதே பகுதியில் பவின் உணவகம் என்ற பெயரில் அசைவ ஹோட்டல் ஒன்றை ஜீவஜோதியின் அம்மா தவமணி நடத்தி வருகிறார். தற்போது நான்காம் வகுப்பு படிக்கும் அவரது மகன் மற்றும் குடும்பமுமே ஜீவஜோதியின் உலகமாக உள்ளது'' என்றனர். தீர்ப்பு குறித்து கேட்பதற்காக அவரது டெய்லர் கடைக்குச் சென்றோம். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் கடையில் வேலை செய்துகொண்டிருந்தனர். நாம் ஜீவஜோதி குறித்து கேட்டோம். மேடம் சென்னைக்குப் போயிருக்காங்க என்றனர். பின்னர் அவர் வீட்டுக்குச் சென்றோம் அங்கு பரணி பவின் என எழுதப்பட்ட வெள்ளை நிற கார் ஒன்று இருந்தது. ஆனால், வீடு பூட்டிக் கிடந்தது.

 சரவணபவன் ராஜகோபா

பிறகு பவின் உணவகத்துக்குச் சென்றோம். அங்கு அவரின் அம்மா தவமணி இருந்தார். நாம் கஷ்டமர் என நினைத்துக்கொண்டு இன்று கடை விடுமுறை என்றார். நாம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு ஜீவஜோதி இல்லையா என்று கேட்டோம். இப்பதான் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக வாழ்கிறாள். தீர்ப்பு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. ஜீவாதான் சொல்லணும். தீர்ப்புக்காகத்தான் கடைக்கு விடுமுறை விட்டுவிட்டேன். ஜீவா வக்கீல் மற்றும் முக்கியமானவர்களிடம் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார். அதன் பிறகு உங்களிடம் மனம் திறந்து பேசுவார்'' என சிரித்தப்படியே கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க