`பாலியல் புகாரில் கடும் நடவடிக்கை!’ - ஐ.ஜி முருகனை நெருக்கும் மத்திய அரசு | PMO and MHA takes serious exception on the handling of sexual harassment complaint against IG Murugan: Sources

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (29/03/2019)

கடைசி தொடர்பு:17:05 (29/03/2019)

`பாலியல் புகாரில் கடும் நடவடிக்கை!’ - ஐ.ஜி முருகனை நெருக்கும் மத்திய அரசு

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பாலியல் புகாரில் சிக்கிய ஐ.ஜி. முருகன்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் அவரின் மேலதிகாரியான ஐ.ஜி முருகன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், அந்தக் கமிட்டி மாற்றியமைக்கப்பட்டு டி.ஜி.பி ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது மேலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என விசாகா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாகா கமிட்டி விசாரணை நடத்தவும், அதேபோல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பாலியல் புகார்

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பெண் எஸ்.பி சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஐஜி முருகனை அமைச்சர்கள் காப்பாற்ற முயல்வதாகவும், இதனால், உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் புலன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. 

இந்தச்சூழலில் ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரை தமிழக அரசு உரிய முறையில் கையாண்டு முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை எதிர்பார்ப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது மற்றும் விசாரணை நடைபெற்று வரும்விதம் ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையைப் பெற்றிருப்பதாக அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

உயர் நீதிமன்றம்

அதேபோல், `பாலியல் புகாருக்குள்ளான அந்த அதிகாரி மாநில அரசுக்குக் கீழ் பணிபுரிவதால், அந்தப் புகாரை உரிய முறையில் குறிப்பிட்ட சட்டவிதிகளுக்குட்பட்டு விசாரிக்கும்படி மாநில அரசை அறிவுறுத்தியிருக்கிறோம்’ என்று அந்த அதிகாரி கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.