துடியலூர் சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் - கமல் வருவதை அறிந்து முந்திச்சென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ! | Admk mla arunkumar met Coimbatore child family

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:57 (30/03/2019)

துடியலூர் சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் - கமல் வருவதை அறிந்து முந்திச்சென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ!

கோவையில் கமல்ஹாசனை முந்திவிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்குமார் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்குமார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிர்ச்சியே அடங்கவில்லை. அதற்குள் அடுத்த பேரதிர்ச்சி கோவையைத் தாக்கியுள்ளது. துடியலூரில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பி, விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர்தான், கஞ்சா அடித்துவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த ஓர் அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னையில் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு கமல்ஹாசன் கோவை வருகிறார் என்ற தகவல் நேற்றே வெளியாகிவிட்டன.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதல்வர் பன்னீர்செல்வமோ வாய் திறக்கவில்லை. கோவை அரசு மருத்துவமனையில் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்ததோடு சரி. கடந்த ஐந்து நாள்களாக ஆளும் அ.தி.மு.க தரப்பில் யாரும் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவில்லை. கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனே நேற்று இரவுதான் சிறுமியின் கிராமத்துக்குச் சென்றுள்ளார். இதனிடையே, கமல் வந்தால் அது ஆளுங்கட்சி மீதான விமர்சனத்தை அதிகரிக்கும் என்பதால், கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்குமார் பி.ஆர்.ஜி, கமல் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே, சிறுமியின் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், பி.ஆர்.ஜி அருண்குமார் வீடு, சிறுமியின் கிராமத்தின் அருகில்தான் உள்ளது. அவர் நினைத்திருந்தால் முதல் ஆளாக சிறுமியின் வீட்டுக்கு வந்திருக்க முடியும். ஆனால், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை பெரிதாக்கி விடக்கூடாது என்பதற்காகவே அருண்குமார் திடீர் விசிட் அடித்துள்ளார் என்று மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் கூறினார்கள்.

ஆறுதல் சொல்ல வந்த அருண்குமாரிடம், ``இனி இதுபோன்ற சம்பவம் இங்கு நடக்கக் கூடாது. குற்றவாளிகளை விரைவில் பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாங்கள் ஓட்டு போடுவோம். இல்லையென்றால் ஓட்டு போட மாட்டோம்" என்றனர். அதற்கு அருண்குமார், ``இந்தச் சம்பவத்துக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது" என்றார்.