சாதிக்குமா... சறுக்குமா? பல போராட்டங்களுக்குப் பிறகு அ.ம.மு.க-வுக்கு பரிசுப்பெட்டி?  | What will be the plan of AMMK

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (30/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (30/03/2019)

சாதிக்குமா... சறுக்குமா? பல போராட்டங்களுக்குப் பிறகு அ.ம.மு.க-வுக்கு பரிசுப்பெட்டி? 

சாதிக்குமா... சறுக்குமா? பல போராட்டங்களுக்குப் பிறகு அ.ம.மு.க-வுக்கு பரிசுப்பெட்டி? 

டைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.ம.மு.க. குக்கர் சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் வேறொரு பொதுவான சின்னத்தை வழங்க  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அக்கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்தச் சின்னம் ஒதுக்கிய நிமிடம் முதல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருவதுடன், பலரும் அச்சின்னம் பற்றியே பேசத் தொடங்கியுள்ளனர். 

தினகரன்

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதுபோல், இந்த முறை ஏமாற்ற முடியாது. பரிசுப்பெட்டி சின்னத்தை, தமிழகம் முழுவதும் கொண்டுபோய்ச் சேர்ப்பதெல்லாம் நடக்காத காரியம். இது, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்குச் சரியான சின்னம்" என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரோ, ``பரிசுப்பெட்டி சின்னம் எங்கும் எடுபடாது" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், தினகரன் ஆதரவாளரும், பெரம்பூர் இடைத்தேர்தல் வேட்பாளருமான வெற்றிவேல், ``பரிசுப்பெட்டி சின்னம் மக்களைச் சென்றடைந்துவிட்டது. மேலும் பலரிடம் சேர்க்க, இன்னும் கால அவகாசம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

தேர்தல் ஆணையத்தால் பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டது குறித்து அ.ம.மு.க-வினரிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வினர் நாங்கள் ஜெயிக்கக்கூடாது என்பதற்காகப் பலவகைகளிலும் தந்திர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, குக்கர் சின்னம் எங்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தனர். இதனால், நாங்கள் பயப்படப்போவதும் இல்லை; பின்வாங்கப்போவதும் இல்லை. எங்களுக்குத் தொல்லை கொடுப்பதால் அவர்களுக்குத்தான் தோல்வி பயம் வந்திருக்கிறது. இதனால், அவர்கள்தான் தோல்வியைச் சந்திக்கப்போகிறார்கள். இப்போது தேர்தல் ஆணையமே எங்களுக்குப் பொதுவான சின்னமான பரிசுப் பெட்டியை வழங்கியிருக்கிறது. குக்கர் சின்னத்தைப்போல பரிசுப்பெட்டி சின்னமும் விரைவாகவே மக்களைக் கவரத் தொடங்கிவிட்டது. 

பரிசுப்பெட்டி சின்னம்பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்ததே எங்களுக்கு முதல் வெற்றிதான். நாங்கள் பொதுவாக அமைதியாக இருந்தாலும், அவர்களே வழியவந்து எங்களை எல்லா விஷயங்களிலும் முன்னிறுத்துகின்றனர். இதனால், நாளுக்குநாள் மக்கள் முன் நாங்கள்  பிரபலமாகி வருகிறோம். இதன்மூலம் எங்கள் அண்ணன் (டி.டி.வி.தினகரன்) மக்களுக்கு நன்கு பரிச்சயமாகிவிட்டார். மேலும், அ.தி.மு.க-வைவிட அ.ம.மு.க-வையே மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அவர்களுடைய ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இதன்மூலம் எங்களுடைய வாக்குவங்கி இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்துக்கு வரும். அதன்பிறகு, நாங்கள் இன்னும் தமிழகத்தில் வலுவான இடத்தைப் பிடிப்போம். அப்போது, அ.தி.மு.க-விலிருந்து மேலும் பலர் எங்கள் கட்சிக்கு வருவர். கால மாற்றத்தில் அ.தி.மு.க-வையும் கைப்பற்றும் நேரம் வரும். அதுவரை காத்திருப்போம்" என்றனர், நம்பிக்கையுடன். 

இதுகுறித்து அ.தி.மு.க.-வினர் சிலரிடம் பேசினோம். ``அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததற்கு நாங்கள் ஒன்றும் காரணமல்ல... அவர்கள் எங்கள்மீது பொய்க் குற்றச்சாட்டை வைக்கின்றனர். முறைப்படி, அவர்கள் கட்சியைப் பதிவுசெய்திருந்தால் குக்கர் சின்னம் கிடைத்திருக்கும். அதைச் செய்யாததால் இப்போது எங்கள் மீது பழிபோடுகின்றனர். மக்களுக்கு அ.தி.மு.க. மீது நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் இரண்டு தேர்தல்களிலும் நிறைய இடங்களில் வெற்றிபெறுவோம். அ.தி.மு.க-வை யாராலும் கைப்பற்ற முடியாது" என்றனர்.

இந்த நிலையில், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு இந்தச் சின்னத்தைப் பெற்றிருக்கிறோம்" என்ற டி.டி.வி.தினகரன், 59 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.ம.மு.க-வுக்குப் பொதுச் சின்னமான பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்ததற்காகத் தேர்தல் ஆணையத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

பரிசுப்பெட்டி மக்களின் பார்வைக்கு வந்துவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்