மதுரையில் பள்ளிவாசலுக்குச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு! | muslim people opposes Minister sellur raju's election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (29/03/2019)

கடைசி தொடர்பு:18:59 (29/03/2019)

மதுரையில் பள்ளிவாசலுக்குச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு!

அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க-வினர் பள்ளிவாசலில் வாக்கு கேட்டு போனபோது  ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜு

மதுரை மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்தியனுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் மதுரை புதூர் சங்கர் நகர் பள்ளிவாசலுக்குச் சென்றனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆதரவு கேட்டு பள்ளிவாசலுக்கு சென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவைப் பார்த்து, பி.ஜே.பி-யுடன் கூட்டு வைத்திருக்கும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம், இங்கு வாக்கு கேட்காதீர்கள் என்று அங்கிருந்த சிலர் வாதம் செய்துள்ளனர். பதிலுக்கு அ.தி.மு.க-வினரும் வாதம் செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. வாக்குகேட்டு வருவது வேட்பாளரின் உரிமை, அதை தடுக்கக் கூடாது என்று அமைச்சரின் ஆதரவாளர்கள் பேசினர். அதன் பின்பு திரும்பி வந்தனர். இதனால் புதூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க