இது நம்ம மானப் பிரச்னை...! - தொண்டர்களிடையே எஸ்.பி.வேலுமணி உத்வேக பேச்சு | AIADMK Minister S.P. Velumani speech

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:01 (30/03/2019)

இது நம்ம மானப் பிரச்னை...! - தொண்டர்களிடையே எஸ்.பி.வேலுமணி உத்வேக பேச்சு

கூட்டணி

அ.தி.மு.க.,வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் நீலகிரி தொகுதி அ.தி.மு.க.தேர்தல் பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். அப்போது கட்சியினரிடம் பேசிய அவர் ``நீலகிரி தொகுதியில் தி.மு.க-வில்  ஆள் இல்லா பற்றாக்குறையால் பெரம்பலூரிலிருந்து ராசாவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். கடந்த தேர்தலில் மக்கள் ராசாவை நிராகரித்தனர். தற்போது மீண்டும் இதே தொகுதிக்கு வந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கு மேல் முறையீட்டில் உள்ளது.17 ஆண்டுகள் மத்தியில் இருந்த தி.மு.க. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, மாறாக துரோகம் மட்டுமே செய்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். மீது புழுதி வாரி தூற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

 

கூட்டணி

அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேசும் ஸ்டாலினை ம.தி.மு.க. தலைவர் வைகோ பேசாத பேச்சா. ஆனால், இப்போது அவர்கள் கூட்டணி அமைக்கவில்லையா. நாங்கள் இப்போது அமைத்துள்ள மெகா கூட்டணி எம்.ஜி.ஆர். பாணியில் உருவாக்கப்பட்ட கூட்டணி. இது வெற்றிக் கூட்டணி. எப்போதும் எம்.ஜி.ஆர். சொல்வார் மாநிலத்தில் ஆளும் அரசு, மத்தியில் உள்ள அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்; அப்போதுதான் மாநிலங்களுக்கு நலத்திட்டங்களைப் பெற முடியும் என்று. அந்தவகையில் இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுடன் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்  நல்ல இணக்கமான அணுகுமுறையில் உள்ளார்கள். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டு மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் கூட்டணி. மோடி அவர்கள் எதிரி நாட்டை நேரடியாக சென்று தாக்கும் திறமை உள்ளவர். அத்தகைய வலிமை மிக்கவரோடு நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி நமது மானப் பிரச்னை. எனவே, டி.டி.வி.போன்ற துரோகிகள் பக்கம் அ.தி.மு.க.தொண்டர்கள் செல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும். அறியாது துரோகிகள் பக்கம் சென்றவர்களை நாம் நம் பக்கம் அழைக்க முயற்சிசெய்ய வேண்டும், இந்தத் தேர்தலில் நாற்பது தொகுதிகளும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெல்லும். ராசாவின் வெற்றி வெறும் கனவு” என்றார்.