'உன்னை அனுமதிக்க முடியாது; வெளியே போ!'- புதுச்சேரி மாலில் ஜொமோட்டோ ஊழியருக்கு நடந்த கொடுமை | Zomato employee forced to go out from puducherry mall

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (29/03/2019)

கடைசி தொடர்பு:20:40 (29/03/2019)

'உன்னை அனுமதிக்க முடியாது; வெளியே போ!'- புதுச்சேரி மாலில் ஜொமோட்டோ ஊழியருக்கு நடந்த கொடுமை

உணவு டெலிவரி செய்யும் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவரை ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாப்பிங் மால்

வீட்டில் இருக்கும் உறவுகளிடம் பேசக்கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு நாம் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்ட நிலையில், தவிர்க்கவே முடியாத அளவுக்கு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் நம்மை ஆக்கிரமித்துவிட்டது. சாலைகளே இல்லாத பகுதிகளில் கூட ஜி.பி.எஸ் கருவிகளின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் பசியைத் தீர்க்க, பைக்கில் பறந்து கொண்டிருக்கிறார்கள். மூடுவிழாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உணவகங்கள் கூட இப்படியான ஆன்லைன் நிறுவனங்களால் லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டன. இப்படியான சூழலில் டெலிவரி ஊழியர் என்ற ஒரே காரணத்துக்காக `ஜொமோட்டோ' ஊழியர் ஒருவரை மாலில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வணிக வளாகம்

வணிக வளாகம் ஒன்றினுள் நுழையும் ஜொமோட்டோ ஊழியரை தனியார் வணிக வளாக ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தும் காட்சியுடன் தொடங்குகிறது அந்தக் காணொளி. `நீங்கள் உள்ளே செல்லக்கூடாது' என்று தடுக்கிறார் வணிக வளாக ஊழியர். `நான் ஏன் செல்லக் கூடாது? உணவு டெலிவரி எடுக்கச் செல்கிறேன். இங்கு வருபவர்களுக்கு நீங்கள் பார்க்கிங் கூட தருவதில்லை' என்று கேட்கும் ஊழியரிடம், `உங்களைப் போன்றவர்களுக்கு மட்டும்தான் தருவதில்லை' என்கிறார் வணிக வளாக ஊழியர். அதற்கு, ``ஏன் சார் எங்களுக்குத் தருவதில்லை. அப்படி என்ன நாங்கள் செய்துவிட்டோம். நாங்கள் உங்களின் டெலிவரி பார்ட்னர்ஸ். எங்களால்தான் உங்களுக்கு வியாபாரம் ஆகிறது. ஆனால் எங்களை பார்க்கிங்கில் பிரித்துப் பார்க்கிறீர்கள். இந்த டீ ஷர்ட்டை கழற்றினால் நானும் உங்களுக்கு வாடிக்கையாளர்தான்' என்று ஆதங்கப்படுகிறார் ஜொமோட்டோ ஊழியர்.

ஜொமோட்டோ

தொடர்ந்து ``அந்த டீ ஷர்ட்டை நீங்கள் கழற்றிவிட்டால் உங்களுக்கு இங்கு தனி மரியாதை” என்கிறார் வணிக வளாகத்தின் ஊழியர். அதற்குள் அங்கு விரைந்து வரும் வணிக வளாகத்தின் மற்றொரு ஊழியர், ``எதற்கு இங்கு கத்திப் பேசுகிறாய்?. வெளியே வா..” என்று டெலிவரி ஊழியரை கையைப் பிடித்து இழுக்கிறார். அதற்கு `என் மேல கையை வைக்காதீங்க. நான் ஏன் வெளியே போகணும்' என்று கேட்ட டெலிவரி ஊழியரை, ``எதற்கு நீ உள்ளே வந்தாய்?” என்று கோபமாகக் கேட்கிறார் வணிக வளாக ஊழியர். அதற்கு, ``இங்கு உணவு டெலிவரி எடுக்க வந்தேன். ஒரு நாளைக்கு 100 ஆர்டர்கள் நான் இங்கிருந்து எடுக்கிறேன்” என்ற ஜொமோட்டோ ஊழியரிடம், ``இது தனியார் இடம். உன்னையெல்லாம் அனுமதிக்க முடியாது.

வணிக வளாக ஊழியர்

உன் ஆர்டரே எங்களுக்கு வேணாம்” என்று சொல்லி வெளியேற்றப்படுகிறார் ஜொமோட்டோவின் டெலிவரி ஊழியர். மாலுக்கு வெளியில் மீண்டும் ``நீ உள்ளே வரக்கூடாது” என்று கண்டிப்புடன் கூறி அதட்டுகிறார் மால் ஊழியர். `நானும் டிகிரி ஹோல்டர்தான்’ என அந்த ஜொமோட்டோ ஊழியர் கூறுவதை வணிக வளாக ஊழியர்கள் யாரும் காதுகொடுத்துக் கேட்காமல், அவரை விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இவை அனைத்தையும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் அந்த ஜொமோட்டோ ஊழியர்.  

டெலிவரி ஊழியர்

`தனது பணியை செய்யச் சென்ற ஊழியரை ஆடையைக் காரணம் காட்டி வெளியேற்றிய செயல் கண்டிக்கத்தக்கது' என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க