ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம்; நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு | Police files case against Nanjil sambath over remarks on Kiran bedi

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:02 (30/03/2019)

ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம்; நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரத்தில் நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

நாஞ்சில் சம்பத்

புதுச்சேரியில் நேற்று முன்தினம் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தவளக்குப்பம் பகுதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய நாஞ்சில் சம்பத், `புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஆணா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை’ என்று பேசியிருந்தார். அவரின் அந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாஞ்சில் சம்பத்

தொலைக்காட்சி வாயிலாக இதைப் பார்த்த புதுச்சேரி பா.ஜ.க நிர்வாகிகள், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை தரக்குறைவாக விமர்சித்த நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்டத் தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான அருணைச் சந்தித்து நேற்று புகார் மனுவை அளித்தனர். அதனுடன் நாஞ்சில் சம்பத் பேச்சு அடங்கிய வீடியோ ஆதாரத்தையும் அளித்தனர். அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, துணைநிலை ஆளுநரின் சார்பு செயலர் சுந்தரேசன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பெண்களை பொது இடங்களில் அவதூறாக பேசுதல், அநாகரீகமான வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க