`அந்தப் பிள்ளைக்கு ஓட்டு போட்டால், உங்கள் சொத்துகள் பறிபோய்விடும்!’ -துரைமுருகனை விளாசிய தினகரன் | If Duraimurugan's son runs away, your assets will be lost. "- Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 07:46 (30/03/2019)

கடைசி தொடர்பு:21:06 (31/03/2019)

`அந்தப் பிள்ளைக்கு ஓட்டு போட்டால், உங்கள் சொத்துகள் பறிபோய்விடும்!’ -துரைமுருகனை விளாசிய தினகரன்

``வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், துரைமுருகனின் மகனை வெற்றிபெறச் செய்தால், உங்களின் சொத்துகள் எல்லாம் பறிபோய்விடும்’’ டி.டி.வி.தினகரன் கடுமையாகச் சாடினார்.

வாக்குசேகரித்த தினகரன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் பாண்டுரங்கன் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பார்த்திபன் இருவரையும் ஆதரித்து, அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று (29-ம் தேதி) தீவிர பிரசாரம் செய்தார். வேலூரில் பேசிய அவர், ‘‘நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பரிசு பெட்டக சின்னம் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சரித்திர சாதனை. இந்திய வரலாற்றிலேயே சுயேச்சையாகப் போட்டியிடும் ஒரு கட்சிக்கு 40 தொகுதிகளுக்கும் ஒரே சின்னம் ஒதுக்கப்படுவது, இதுவே முதல்முறையாகப் பார்க்கப்படுகிறது. காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு உட்பட தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னைகள், தேசிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுவருகின்றன.

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி மற்றும் எடப்பாடி ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவர நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலை, மினி பொதுத்தேர்தலாகப் பார்க்கிறோம். இதில் தோற்றுப்போனால் மோடி அல்ல, அவரின் டாடி அல்ல, அவர்களுக்கெல்லாம் டாடி வந்தாலும் அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாது. தமிழக அமைச்சர்களுக்கு மோடி தான் டாடி. கட்சி, ஆட்சியை அவரிடம் அடகுவைத்துவிட்டார்கள், படுபாவிகள். அம்மா கடைசிக் காலம் வரை, யாரையெல்லாம் தன் அருகில் அனுமதிக்காமல் இருந்தார்களோ, அவர்களெல்லாம் இரட்டை இலையை தூக்கிக்கொண்டு சுற்றுகிறார்கள். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு, பிள்ளையைத் தத்துக் கொடுப்பதாக துரைமுருகன் சொல்கிறார். அந்தப் பிள்ளையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களின் சொத்துகள் பறிபோய்விடும். 

வாக்குசேகரித்த தினகரன்

ஆட்சியில் இல்லாதபோதே பிரியாணி கடை, பியூட்டி பார்லர் உடைக்கப்படுகின்றன. டீ கடைகள் காணாமல்போகின்றன. மோடியின் பக்கம் செல்வதா, ராகுலின் பக்கம் செல்வதா என்று தி.மு.க தத்தளித்துக்கொண்டிருந்தது. இந்தத் தேர்தலில் மோடி வெற்றிபெற்றால், தி.மு.க அவரின் பக்கம் ஓடிவிடும். தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் அவர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கைக்கட்டி வேடிக்கைபார்த்தனர். அ.ம.மு.க-வை பொறுத்தவரை பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை கிடையாது. பதவி சுகத்துக்காக யாருடனும் சமரசம் செய்யாத இயக்கம். தமிழகத்தின் நலனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.