`திராணியுள்ளவர்கள் நேரடியாக வந்து மோதட்டும்!' - ஐ.டி ரெய்டால் தகித்த துரைமுருகன் | Duraimurugan press meet regarding IT raid that happened this morning

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (30/03/2019)

கடைசி தொடர்பு:11:13 (30/03/2019)

`திராணியுள்ளவர்கள் நேரடியாக வந்து மோதட்டும்!' - ஐ.டி ரெய்டால் தகித்த துரைமுருகன்

‘‘வேலூர் தொகுதியில், என் மகனின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், மத்திய-மாநில அரசுகளுடன் உறவுகொண்டிருக்கும் அரசியல்வாதிகள், வருமானவரித் துறை அதிகாரிகளை ஏவிவிட்டு முதுகில் குத்தப்பார்க்கிறார்கள்’’ என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கடுமையாகச் சாடினார்.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித் துறை அதிகாரிகள்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். மகனை ஆதரித்து, தொகுதி முழுவதும் துரைமுருகன் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிறார். இந்த நிலையில், காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டுக்கு நேற்றிரவு வருமானவரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனைநடத்த வந்தனர். இன்று விடியற்காலை 5 மணிவரை நடைபெற்ற சோதனையில், எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுபற்றி, துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் வெளியில் சென்றுவிட்டு வீடுதிரும்பியபோது, மூன்று பேர் ஹாலில் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம், யாரென்று கேட்டேன். அதில் ஒருவர் கார்டைக் காட்டி, நாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள், சோதனை நடத்தப்போகிறோம் என்றார். இப்படிப்பட்ட கார்டை யார் வேண்டுமானாலும் காட்டலாம். சோதனை நடத்துவதற்கான உத்தரவு ஆணை இருக்கிறதா? என்று கேட்டேன். பின்னர், நாங்கள் தவறாக வந்துவிட்டோம் என்று சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டனர். 

சிறிதுநேரம் கழித்து மீண்டும் வந்த அவர்கள், தங்களைத் தேர்தல் பறக்கும் படை என்று கூறி மாறிமாறிப் பேசினார்கள். முரண்பட்டுப் பேசும் உங்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது. இரவு 10 மணிக்கு மேல் சோதனை நடத்தக் கூடாது என சட்டம் சொல்கிறது என்று வாதிட்டேன். இன்று அதிகாலை மூன்று மணிக்கு, மேலும் இரண்டு பேர் வருமானவரித் துறை அதிகாரிகளின் உத்தரவு வாங்கிக்கொண்டு வந்தனர். பிறகு, சோதனை நடத்த அனுமதித்தேன். ஒன்றும் சிக்காததால், வருமானவரித் துறையினர் திரும்பிப் போய்விட்டனர். நாங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் நடத்தவில்லை. சாதாரணமாகக் கல்லூரி நடத்திக்கொண்டிருக்கிறோம். என் மகன் கதிர்ஆனந்த், வேலூர் தொகுதியில் நிற்கிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், பயமுறுத்திப் பணிய வைத்துவிடலாம் என்று, களத்தில் எங்களை எதிர்க்கத் திராணியற்றவர்கள் கணக்குப்போடுகிறார்கள். மத்திய-மாநில அரசுகளுடன் உறவுகொண்டிருக்கும்  அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி இது. வருமானவரித் துறை அதிகாரிகளை ஏவிவிட்டு முதுகில் குத்தப்பார்க்கிறார்கள். 

துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர்ஆனந்த்.

இப்படி மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவதைப் பார்த்து, தி.மு.க-வில் உள்ள கடைமட்டத் தொண்டன்கூட அஞ்சமாட்டான். நாங்கள், அடக்குமுறையைச் சந்தித்தவர்கள். எங்களை எதிர்க்கிற திராணியுள்ளவர்கள் நேரடியாக மோத வேண்டும். மத்திய-மாநில அரசுகளின் காலில்விழுந்து, சிலர் இந்த கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது, ஜனநாயக நாடு. கையாளாகாத அரசியல்வாதிகள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆயிரம் தடைகள் இருந்தாலும், அதைக் கடந்துசெல்பவன் நான். கருணாநிதியிடம், 53 ஆண்டுகள் பயிற்சிபெற்றுள்ளேன்’’ என்றார். இதேபோல, குடியாத்தம் அணங்காநல்லூரில் உள்ள துரைமுருகனின் நெருங்கிய ஆதரவாளரும், தி.மு.க பிரமுகருமான சக்கரவர்த்தி (60) என்பவரின் வீட்டிலும், வருமானவரித் துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தியதில் ஒன்றும் சிக்கவில்லை.