கொல்லிமலையில் பற்றி எரியும் காட்டுத்தீ!- சாம்பலான 200 ஏக்கர் மரங்கள்... போராடும் 250 தீயணைப்பு வீரர்கள் | kollimalai fire accident news

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (30/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (30/03/2019)

கொல்லிமலையில் பற்றி எரியும் காட்டுத்தீ!- சாம்பலான 200 ஏக்கர் மரங்கள்... போராடும் 250 தீயணைப்பு வீரர்கள்

நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலமாக விளங்கும் கொல்லிமலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத் துறையினர் திணறுகின்றனர்.

கோடைக்காலம் ஆரம்பித்ததில் இருந்தே மேகமலை, தேவாரம், கொடைக்கானல் உட்பட, மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதேபோல, கர்நாடகா மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் சில வாரங்களுக்கு முன்பு காட்டுத்தீ பெரிய அளவில் ஏற்பட்டது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக விளங்கும் கொல்லிமலையில், தற்போது கடும் வறட்சி நிலவுவதால் செடி, கொடி, மரங்கள் காய்ந்துவருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காய்ந்த சருகுகள் எளிதில் தீப்பற்றி, மலைப் பகுதியில் ஆங்காங்கே அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டுவருகிறது.

பற்றி எரியும் கொல்லிமலை

மலைப்பகுதியில் சுற்றித்திரியும் சிலர், அலட்சியமாக போட்டுவிட்டுச் செல்லும் பீடி, சிகரெட் துண்டுகளாலும் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக கொல்லிமலையில் காட்டுத்தீ எரிந்து, காற்றின் வேகத்தால் மலைப்பகுதியில் இருந்து மளமளவென அடிவாரப் பகுதி வரை தீ பரவி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டுவந்த வாழை, பாக்கு, மா மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமடைந்தன. அப்பகுதியில் இருந்த சில குடிசை வீடுகளும் எரிந்துவிட்டன. மலைப்பகுதியில் பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்தக் காட்டுத்தீயின் காரணமாக, கொல்லிமலைப் பகுதி புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது.

காட்டுத்தீ

இதற்கிடையில், இந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், மாவட்ட வனஅலுவலர் காஞ்சனா, உதவி கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். மலைப் பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து எரிவதால், கொல்லிமலைக்கு தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலைப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறையினர் அடிவாரப் பகுதியில் நின்று சுற்றுலாப் பயணிகளைத் திருப்பி அனுப்பிவருகின்றனர். கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில், மளமளவென காட்டுத்தீ பரவிவருகிறது. தீயை அணைக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க