`ஜெயலலிதா இருந்திருந்தால் காலில் விழுந்திருப்பேன்!'- சரவணபவன் விவகாரத்தில் நெகிழும் ஜீவஜோதி | Jayalalitha Ensured Accused Were Punished says Jeevajothi

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (30/03/2019)

கடைசி தொடர்பு:12:10 (30/03/2019)

`ஜெயலலிதா இருந்திருந்தால் காலில் விழுந்திருப்பேன்!'- சரவணபவன் விவகாரத்தில் நெகிழும் ஜீவஜோதி

ஜெயலலிதா - ஜீவஜோதி

‘சரவண பவன்’ஆலமரமாய் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதன் உரிமையாளர் ராஜகோபால் மீது ஜீவஜோதி என்ற இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ராஜகோபால் தன்னை  திருமணம் செய்துகொள்ள விரும்பி தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை, ராஜகோபால் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டினார். நாளிதழ்களில் ஜீவஜோதி தலைப்புச் செய்தியானார். வாரப்பத்திரிகைகள் ஜீவஜோதியின் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தது. இந்த அனைத்துக் குற்றச்சாட்டையும் ‘தொழில் போட்டி’ என்ற ஒற்றைப் பதிலில் மறுப்பு தெரிவித்தார். சரவண பவன் அண்ணாச்சிக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். ஜீவஜோதிக்கு உறவினர் பிரின்ஸ் சாந்தகுமார் மீது காதல். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறிப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். சாந்தகுமாரை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிட உன்னை ராணிபோல் வாழவைக்கிறேன் என ராஜகோபால் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அவர் அதற்கு ஒத்துவராததால் பின் மிரட்டல் விடுத்துள்ளார். ஜீவஜோதியை அடைய சாந்தகுமார் தடையாக இருப்பதாக எண்ணிய ராஜகோபால் அவரைத் தீர்த்துக்கட்டியுள்ளார். இந்தச் சம்பவம் 2001-ல் நடைபெற்றது. வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியது.

ராஜகோபால்

பூந்தமல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் 2004-ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. டேனியல் வாக்குமூலம்தான் இவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தந்தது. பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது. ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபால் மீதான ஆயுள் தண்டனையை நேற்று உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ` ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜீவஜோதி

தீர்ப்பு குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள ஜீவஜோதி, “ உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தத் தருணத்தில் நீதியரசர்களுக்கும் மட்டுமல்ல மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ராஜகோபால் எனக்குத் தொந்தரவு கொடுத்தபோது நடந்த விவரங்களை ஜெயலலிதாவிடம் கூறினேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லை என்றாலும் எனக்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். சாந்தகுமார் கொலை செய்யப்பட்டபோது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். இந்த வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்தால் அவரது காலில் விழுந்து வணங்கி இருப்பேன். இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும் இறுதியில் நீதியே வென்றது'' என்றார்.

மிகப்பெரிய தொழிலதிபரான ராஜகோபால் தீவிர முருகபக்தர், கிருபானந்தவாரியர் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். அவர் அறைகளில் முருகன் மற்றும் கிருபானந்தவாரியரின் படங்கள் இருக்கும். ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவரான ராஜகோபால் ஜோதிடர்களின் அறிவுரைப்படி அனைத்து காரியங்களையும் செய்வார். ஜீவஜோதியை நீங்கள் திருமணம் செய்தால் அவரது ஜாதகபலனின்படி நீங்கள் மிகப்பெரிய மனிதராகலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அதன்காரணமாக ஜீவஜோதியை அடைய முயற்சிசெய்துள்ளார். ஜோதிடர்களின் பலனால் தனது இறுதிக்காலத்தை தற்போது சிறைக்கம்பிகளுக்கிடையே நகர்த்தவுள்ளார்.