2009-ல் உரிமம் ரத்து, 2019-ல் பெண் அதிகாரி சுட்டுக்கொலை! - 10 ஆண்டுகளுக்குப் பிறகும் தீராத பஞ்சாப் சிங்கின் வன்மம் | Punjab drug officer shot dead inside her office

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (30/03/2019)

கடைசி தொடர்பு:15:37 (30/03/2019)

2009-ல் உரிமம் ரத்து, 2019-ல் பெண் அதிகாரி சுட்டுக்கொலை! - 10 ஆண்டுகளுக்குப் பிறகும் தீராத பஞ்சாப் சிங்கின் வன்மம்

நேகா சுகாதாரத்துறை அதிகாரி

அரசுத் துறைகளில் நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, எப்போதும் அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் அவர்கள் தங்களது பணிகளைச் செய்துவருகின்றனர். தங்களது நேர்மையான செயல்பாட்டினால் உயிரையும் இழக்க நேரிடுகிறது. இப்படி ஒரு சம்பவம்தான் பஞ்சாபில் இன்று நடந்துள்ளது. 

பஞ்சாப் சுகாதாரத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிவந்தவர், நேகா ஷோரி (Neha Shoree). 36 வயதான இவர், நேர்மைக்குப் பெயர்பெற்றவர். இன்று காலை, தனது அலுவலகத்தில் வழக்கம்போல பணியாற்றிக்கொண்டிருந்தார். சுமார் 10.30 மணிக்கு, அவரது அலுவலகத்திற்குள் நுழைந்த பல்வந்தர் சிங் என்ற நபர், நேகாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர், ஹேப்பி ஹோலி என சத்தமாக கூச்சலிட்டு, அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

நேகா மற்றும் பல்வந்தர் இருவரையும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். நேகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரி நேகா, கடந்த 2009-ம் ஆண்டு ட்ரக் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியுள்ளார். அப்போது, பல்வந்தரின் மருந்தகத்துக்கு வழக்கமான சோதனைக்குச் சென்றுள்ளார். அங்கு, தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, மருந்தகம் தரப்பில் உரிய விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. தடைசெய்யப்பட்ட போதை மருத்துகளை வைத்திருந்ததற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், மருத்தகத்தின் உரிமையை அவர் ரத்துசெய்துள்ளார். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றுள்ளது. அந்த ஆத்திரத்தில்தான் பல்வந்தர் சிங் நேகாவைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.