`இயக்குநர் மகேந்திரனுக்கு ட்ரீட்மென்ட் நடந்துக்கிட்டிருக்கு'- குடும்பத்தினர் விளக்கம் | ''Treatments are still going'' - says Director Mahendiran family

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:14:00 (30/03/2019)

`இயக்குநர் மகேந்திரனுக்கு ட்ரீட்மென்ட் நடந்துக்கிட்டிருக்கு'- குடும்பத்தினர் விளக்கம்

மிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர் மகேந்திரன். `முள்ளும் மலரும்', `உதிரிப்பூக்கள்', `ஜானி', `நண்டு', `மெட்டி' என்று அவர் உருவாக்கிய திரைப்படைப்புகள் எல்லாமே தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணங்களைக் காட்டியவை. இயக்குநர் மகேந்திரனைப் பற்றி, ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், நல்ல சினிமாவை நேசிப்பவர்கள் மகேந்திரனை நேசிக்காமல் இருக்கவே முடியாது. சில தினங்களுக்கு முன்னால், அவருக்குச் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டதாகவும், அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டயாலிஸிஸ் செய்து வருவதாகவும் செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து, மகேந்திரனின் மகன், ஜான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'அப்பா நலம் பெற எல்லோரும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

இயக்குநர் மகேந்திரன்

இதைத் தொடர்ந்து, மகேந்திரனின் ரசிகர்கள் பலரும் `சாருக்கு என்ன ஆச்சு'; `நல்லபடியா மீண்டு வந்துடுங்க சார்' என்று அவர் மீதான தங்கள் அன்பையும் பதற்றத்தையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொண்டார்கள். நாமும், மகேந்திரன் சார் மொபைல் எண்ணுக்குத் தொடர்ந்து கால் செய்தோம். இன்றுதான் அவருடைய குடும்பத்தினரிடம் பேச முடிந்தது. 

``அவருக்கு ட்ரீட்மென்ட் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, இப்ப எதுவும் சொல்ற நிலைமையில் நாங்க இல்லை. மருத்துவமனையிலேயே வைச்சு சிகிச்சையைத் தொடரலாமா அல்லது வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் அங்கே வைச்சு சிகிச்சையைத் தொடரலாமான்னு தெரியலை. டாக்டர் சொல்றதை வைச்சுதான் முடிவு பண்ணணும்'' என்பவர்களுடைய குரல்களில் பகிர முடியாத சோகம் கனமாக அழுத்திக் கொண்டிருப்பதை தெளிவாக உணர முடிந்தது. 

மீண்டு வாருங்கள் மகேந்திரன் சார்!