`நீங்க ஊழல் செய்யாதவர்கள் என்றால் நாங்க..!' - தே.மு.தி.க வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அலப்பறை | Arguments in north chennai dmdk candidate introduction meeting

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (30/03/2019)

கடைசி தொடர்பு:21:16 (31/03/2019)

`நீங்க ஊழல் செய்யாதவர்கள் என்றால் நாங்க..!' - தே.மு.தி.க வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அலப்பறை

தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ்

தே.மு.தி.க-வின் வடசென்னை வேட்பாளர் மோகன்ராஜ், அறிமுக கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி பேசியதை அ.தி.மு.க. நிர்வாகி கண்டித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில்  அழகாபுரம் ஆர். மோகன்ராஜ்  போட்டியிடுகிறார். அ.தி.மு.க. தலைமையிலான செயல்வீரர் அறிமுக கூட்டம், திருவொற்றியூரில் நடந்தது. இதில்  அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ. அலெக்ஸாண்டர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மைக்கைப்பிடித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ``நாங்கள் ஊழல் செய்யாதவர்கள், காசுக்கு வேலை செய்யவரவில்லை, மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்று கூட்டணி அமைத்துள்ளோம்'' என்று பேசினார். அதைக் கேட்ட அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர், ``பா.ஜ.க. நிர்வாகியை கண்டித்ததோடு இந்தக் கூட்டத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் பேசுங்கள். குறிப்பாக வேட்பாளர் மோகன் ராஜ் வெற்றி குறித்து பேசுங்கள். நீங்கள் ஊழல் செய்யாதவர்கள் என்றால்..'' என்று ஆவேசமாக கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தொண்டர்களை நிர்வாகிகள் அமைதியாக இருக்கும்படி கூறினர். 

தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார்

தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், ``கடந்தமுறை வட சென்னை வேட்பாளர் வெங்கடேஷ் பாபு ஜெயிப்பார் என்று கூறினேன். என் ஜோசியம் பளிச்சது.  இப்போவும் அழகாபுரம் மோகன்ராஜ் ஜெயிப்பாரு'' என்றார். அதன்பிறகு உன்னை அறிந்தால் என்ற எம்.ஜி.ஆர் பாட்டை அமைச்சர் ஜெயக்குமார் பாடியபோது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அதை ரசித்துக் கேட்டனர். அதன்பிறகு மதம் கொண்ட யானை.... சினம் கொண்ட சிங்கம் என எம்.ஜி.ஆர்., நம்பியார் டயலாக் தன் பானியில் பேசி அசத்தினார். 

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  டி.டி.வி.தினகரன் என்ன சின்னமாவது வாங்கிவிட்டு போகட்டும். அவருக்கு கிடைத்துள்ள பரிசுப் பெட்டி சின்னம் ஒரு காலி தகர டப்பா. அதன் உள்ளே ஒன்றும் இருக்காது. மேலும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை சுயேச்சை வேட்பாளர்களாகத்தான் தேர்தல் ஆணையம் கருதியுள்ளது. பொதுவாக சுயேச்சை வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளை பெறுவார்கள். இதனால் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுபவர்கள் நோட்டாவை ஜெயித்தால் நல்ல விஷயம்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை தலைவர், அம்மாவின் டாமினேசன்தான் இருக்கிறது.

தி.மு.க-வினரிடமிருந்துதான் பணம், தங்கம், பொருள்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னம் வெடித்துவிட்டது. திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை தொடர்ந்து ஆர்.கே.நகரில் 20 ரூபாய் பார்முலா பின்பற்றப்பட்டது. அது, அந்தத் தொகுதியில் எடுபட்டது. தற்போது அவர்களின் எந்த பார்முலாவும் எடுபடாது. பரிசுப் பெட்டி ஒரு சவப்பெட்டி. அ.தி.மு.க.விடம் மக்களை சந்திக்கிற பார்முலா இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்கிற பார்முலா உள்ளது. மக்கள் எங்களோடு இருக்கிற பார்முலா இருக்கிறது. அதைவிட வெற்றி பெறக்கூடிய இரட்டை இலைச் சின்னம் பார்முலா உள்ளது. வடசென்னையில் முரசு கொட்டோ கொட்டு என கொட்டப்போகிறது. தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சிகளும் இரட்டை இலை சின்னமும்தான் வெற்றி பெறப் போகிறது.

தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார்

பிரேமலதாவைப் பொறுத்தவரை அம்மா ஒருத்தர்தான், தலைவர் ஒருத்தர்தான் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார். எங்கள் கூட்டணிக்குள் சிண்டு மூட்டிவிடப் பார்க்கிறார்கள். எங்களுக்குள் சண்டையை மூட்டிவிட பார்க்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்க மாட்டோம். சட்டசபையில் தே.மு.தி.க-வில் இருந்த ஸ்லீப்பர் செல்களால்தான் அன்றைக்கு அ.தி.மு.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் பிரச்னை ஏற்பட்டது. எங்கள் கூட்டணியைப் பிரிக்க அப்படிச் செய்தார்கள். ஆனால், இன்று அப்படிப்பட்ட சூழல் இல்லை. தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதனால் இரட்டை இலையும் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும்தான் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும்'' என்றார். 

வேட்பாளர் மோகன்ராஜ் பேசும்போது, ``கடந்த தேர்தலில்தான் வைகோ எங்கள வைச்சு செஞ்சாரு. இப்போ தி.மு.க கூட்டணில இருக்காரு. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சென்னையிலதான் குடியிருந்து வருகிறேன். என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கும் சென்னையில்தான் திருமணம் நடந்தது. என் மகனுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகளுக்குதான் கல்யாணம் நடந்துள்ளது. எனவே என்னை மாற்று நபராக பார்க்காதீர்கள்" என்றார்.