ஒரு மணி நேரம் ரயில் சேவையை நிறுத்திய வாலிபர்!- பதறிப்போன அதிகாரிகள் | train service stopped in Nagercoil Railway station

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (30/03/2019)

கடைசி தொடர்பு:15:45 (30/03/2019)

ஒரு மணி நேரம் ரயில் சேவையை நிறுத்திய வாலிபர்!- பதறிப்போன அதிகாரிகள்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்கம்பிக்கு மேல் உள்ள இணைப்புத் தூணில் ஏறிய வடநாட்டைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரால் ரயில் சேவை மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் வாலிபரை மீட்டனர்.

வாலிபர்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவின் முக்கிய தலைநகரங்களுக்கும் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. வட மாநிலங்கள் வழியாக வரும் ரயில்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். சிலர் மனநலம் பாதித்தவர்களை ரயிலில் அழைத்து வந்து கன்னியாகுமரியில் விட்டுவிட்டுச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மின் கம்பம்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கோவை செல்லும் பயணிகள் ரயில் இன்று காலை நின்று கொண்டிருந்தது. அப்போது  உயர்மின்னழுத்தக் கம்பிக்கு மேல் உள்ள இணைப்புத் தூணில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்ததை பயணிகள் பார்த்துள்ளனர். அவர்கள் இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன ரயில்வே அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்தனர்.

ரயில் நிலையம்

இதைத் தொடர்ந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் மற்றும் சில ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கூறப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்குசென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி மனநலம் பாதித்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டவர், ரயில் நிலையத்தில் இருந்த தூண் மூலம் மெதுவாக ஏறி மின்கம்பிகளுக்கு மேல் வந்து அமர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. மனநலம் பாதித்த வாலிபர் மீட்கப்பட்டபிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து விபத்துகளில் சிக்கிவிடாமல் இருக்க ரயில்வே காவல்துறை கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.