`உயிருக்கு உயிராக காதலித்தேன், துரோகம் செய்துவிட்டாள்!'- காதல் மனைவியைக் கொன்ற கணவன் | wife murdered by husband in chennai kk nagar

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (30/03/2019)

`உயிருக்கு உயிராக காதலித்தேன், துரோகம் செய்துவிட்டாள்!'- காதல் மனைவியைக் கொன்ற கணவன்

கொலை

காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கத்தியால் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கணவன், மனைவிக்கு இடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால்தான் காதல் திருமணம் மூன்று மாதங்களிலேயே கசந்துள்ளது. 

சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (47). இவரின் மனைவி சரிதா (43). இவர்களின் மகள் சந்தியா (20) இவரும் அருள் குமார் (24) என்பவரும் காதலித்தனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அருள்குமார் எலெக்ட்ரீஷியனாக உள்ளார். திருமணத்துக்குப்பிறகு மாமனார் வீட்டில் அருளும் சந்தியாவும் குடியிருந்தனர். திருமணமான தொடக்கத்தில் இருவரும் அன்பாக இருந்தனர். அதன்பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் நிம்மதி இல்லை. திருமணம் நடந்த மூன்று மாதங்களிலேயே கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் வழக்கம்போல இன்று தகராறு ஏற்பட்டது. அப்போது குடும்பத்தினர் அவர்களை சமரசப்படுத்தினர். ஆனால், அருள்குமார் சமாதானமாகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், கத்தியால் சந்தியாவை குத்த முயன்றார். அதை மாமியார்  சரிதா தடுத்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சரிதாவை தள்ளிவிட்டு விட்டு சந்தியாவை மீண்டும் கத்தியால் குத்தினார் அருள் குமார். இதில் தொண்டைப் பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சந்தியா கீழே சரிந்தார். இதைப்பார்த்ததும் சரிதா கதறினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு சந்தியாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார் சரிதா. ஆனால், சந்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். 

 மனைவியை கொலை செய்த அருள்

இதையடுத்து, கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் ஆகியோர் வந்து விசாரித்தனர். மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக அருள் குமாரை போலீஸார் கைது செய்தனர். சந்தியாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது.  

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சந்தியாவும் அருள்குமாரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இல்லை. சந்தியா மீது அருள்குமாருக்கு சந்தேகம் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். இதுதான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம். சந்தியாவின் அம்மா சரிதா கண் முன்னால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைத் தடுக்க சரிதா முயற்சி செய்துள்ளார். அதில் அவருக்கும் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சந்தியாவை கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற அருள்குமாரை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது உயிருக்கு உயிராக அவளைக் காதலித்தேன். ஆனால் எனக்கு அவள் துரோகம் செய்துவிட்டாள் என்று கூறினார். அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம். கணவன், மனைவிக்கு இடையே ஒத்துவரவில்லை என்றால் சுமுகமாக பேசி முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் ஆத்திரத்தில் அருள்குமார், சந்தியாவை கொலை செய்துவிட்டார்" என்றனர். 

சந்தியாவின் உறவினர்கள் கூறுகையில், ``உருகி, உருகி காதலித்து திருமணம் செய்த மனைவியை எப்படிதான் கொலை செய்ய மனம் வந்தது என்று தெரியவில்லை. கொலையை தனியாக சந்தியாவின் அம்மா தடுத்துள்ளார். அவரின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டுள்ளது. அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. இப்படி அநியாயமாக சந்தியாவை கொலை செய்த அருள்குமாருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும்" என்றனர். 

 காதல் திருமணம் மூன்று மாதங்களிலேயே கசந்ததோடு கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.