சிதம்பரம் நடராஜரை தரிசித்து, தீட்சிதர்களிடம் வாக்கு கேட்ட திருமாவளவன்! | Tirumavalavan campaign in Chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (30/03/2019)

கடைசி தொடர்பு:16:40 (30/03/2019)

சிதம்பரம் நடராஜரை தரிசித்து, தீட்சிதர்களிடம் வாக்கு கேட்ட திருமாவளவன்!

சிதம்பரம் நடராஜரைத் தரிசித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டார்.

திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் கடந்த ஒரு வாரமாகச் சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திருமாவளவன் வந்தார். அவரை கோயில் தீட்சிதர்கள்  வரவேற்று சால்வை அணிவித்தனர். தொடர்ந்து நடராஜர் கோயில் சித்சபைக்குச் சென்ற அவர் முறைப்படி சட்டையை கழற்றி உள்ளே சென்று நடராஜரை தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த தீட்சிதர்களிடம் சற்று நேரம் அமர்ந்து உரையாடிய திருமாவளவன் அவர்களிடம் வாக்கு கேட்டார்.

திருமாவளவன்.

அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ``நான் கடந்த முறை நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் இங்கு போட்டியிட்டபோது, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். அப்போது  எனது கார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என உயர் நீதிமன்றத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன். தமிழக முதல்வர் காவிரி- கோதாவரி இணைப்பு பற்றி பேசி வருகிறார். இது சாத்தியம் இல்லாத ஒன்று. தேர்தலை மனதில் வைத்து அவர் பேசி வருகிறார். முதலில் அவர் தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். சிதம்பரம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறப் பாடுபடுவேன்" என்று கூறினார். அவருடன் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.