`இந்தக் குரல் ஸ்டாலின் காதில் ஒலிக்கட்டும்!'- மயிலாடுதுறையில் முதல்வர் பிரசாரம் | election DMK The election statement is false - the chief minister's campaign

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (30/03/2019)

கடைசி தொடர்பு:21:19 (31/03/2019)

`இந்தக் குரல் ஸ்டாலின் காதில் ஒலிக்கட்டும்!'- மயிலாடுதுறையில் முதல்வர் பிரசாரம்

elections

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் மயிலாடுதுறை, சின்னக்கடைவீதியில் பிரசாரம் செய்தார்.

 மயிலாடுதுறையில் முதல்வர் பிரசாரம்

நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் சிறப்பான வரவேற்புக்குப்பின் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் பேசினார். அப்போது , ``அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் மக்கள் கூட்டம் கூடுவது இல்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஆனால், இங்கு கூடியுள்ள மக்களின் குரல் ஸ்டாலின் காது வரைக்கும் ஒலிக்கட்டும். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் பொம்மை போல ஒரே இடத்தில் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், நான் மக்களோடு மக்களாக 125 கூட்டங்கள் வரை சென்று பிரசாரம் செய்து வருகிறேன்.

கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு எங்கள் லட்சிய  திட்டம். அதை நிறைவேற்றியே தீருவோம். கடலில் வீணாக  கலக்கும் கோதாவரி தண்ணீரை டெல்டா பகுதி பாசனத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த ஆவண செய்யப்படும். விவசாயம், தொழிற்சாலை இவை இரண்டுமே வளர்ச்சி அடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கை வெட்டி அறிக்கை, பொய் அறிக்கை. நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று  தி.மு.க. கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் கொடுக்கவில்லை. ஏமாற்றினார்கள்.

15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.வால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தான் பயனடைந்தனர். காவிரி பிரச்னைக்காக 23 நாள் மக்களவையை முடக்கியவர்கள் நமது  அ.தி.மு.க.எம்.பி-க்கள். இந்திய சரித்திரத்திலேயே ஒரு மாநில பிரச்னைக்காக இத்தனை நாள் மக்களவை முடக்கப்பட்ட வரலாறு கிடையாது. காவிரி நீர் பிரச்னைக்காக தி.மு.க. எந்தக் குரலும் தரவில்லை. எனவே மத்தியில் நிலையான ஆட்சி அமைய, மோடி மீண்டும் பிரதமராக, மயிலாடுதுறை தொகுதியில் ஆசைமணிக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார்.

படங்கள்: பா.பிரசன்னா