`கனிமொழி வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும்!’ இன்பதுரை எம்.எல்.ஏ காட்டம் | Kanimmozhi should not be allowed to contest in thooothukudi, says ADMK MLA Inbadurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (30/03/2019)

கடைசி தொடர்பு:18:40 (30/03/2019)

`கனிமொழி வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும்!’ இன்பதுரை எம்.எல்.ஏ காட்டம்

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.க வேட்பாளர் கனிமொழி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என அ.தி.மு.க-வைச் சேர்ந்த இன்பதுரை எம்.எல்..ஏ தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார். 

கனிமொழி மீது புகார் - இன்பதுரை

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளரான கனிமொழி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக நடந்த சம்பவத்தை வைத்து தவறாகப் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் விளக்க மனு அளித்துள்ளார். 

இதற்குப் பதில் அளிக்கும் வகையில், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான ஐ.எஸ்.இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அதற்கு விளக்கம் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், வீடியோவில் இருப்பது நாங்கள் இல்லை எனச் சொல்லவில்லை.. பணம் கொடுக்கவில்லை என்றும் கூறவில்லை,  முன்பு நடந்த சம்பவம் என்று சொல்லியிருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் வந்திருந்த கனிமொழி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே பணம் கொடுத்திருந்தாலும் கூட அதுவும் கையூட்டுதான்..

இன்பதுரை எம்.எல்.ஏ

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கனிமொழி, தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.  எனவே, அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். தி.மு.க சின்னத்தையும் முடக்க வேண்டும். கனிமொழி மீது உறுதியான கிரிமினல்  நடவடிக்கை தேவை.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், சட்டத்தையும் மதிப்பதில்லை. நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை. சமீபத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் வந்த தீர்ப்புக்கு எதிராகப் பேசிய அவர், `இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்தைச் சரிக்கட்டிப் பெறப்பட்டது’ எனப் பேசியிருக்கிறார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். நீதிமன்றத்தை அவமதித்துப் பேசிய ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு தொடர இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.