`அனைத்து உதவிகளையும் உங்களுக்குச் செய்வேன்!'- வயலில் இறங்கி ஓட்டுக்கேட்ட முதல்வர் பழனிசாமி | edappadi palanisamy campaign in thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/03/2019)

கடைசி தொடர்பு:22:51 (31/03/2019)

`அனைத்து உதவிகளையும் உங்களுக்குச் செய்வேன்!'- வயலில் இறங்கி ஓட்டுக்கேட்ட முதல்வர் பழனிசாமி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள பனங்குடி கிராமத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளிடம் வயலில் இறங்கி வாக்கு சேகரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக  திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``இந்த உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கே வந்துள்ள அனைவருக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்'' என தனது உரையைத் தொடங்கினார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும் அவர் கூறுகையில், ``நானும் ஒரு விவசாயிதான். அதனால்தான் டெல்டா மாவட்ட மக்களின் முக்கிய பிரச்னையான காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை இந்த அரசு முதல் திட்டமாக கையில் எடுத்துள்ளது. வேளாண் மக்களுக்கு உதவும் வகையில் 3200 ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. மழை நீரை முழுவதும் சேமிக்க தடுப்பணைகள் கட்டுவதற்காக 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

பழனிசாமி

பின்னர் நன்னிலம் வழியாகத் திருவாரூருக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி வழியில் பனங்குடி என்ற இடத்தில் பருத்தி வயலில் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகளைப் பார்த்ததும் வயலில் இறங்கிச் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தற்போதுள்ள அரசு செய்யும்'' எனக் கூறி அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

பழனிசாமி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``எனது பிரசார வழி நெடுகிலும் ஆரவாரத்தோடு மக்கள் எங்களை வரவேற்கிறார்கள். இதிலிருந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாகத் தெரிகிறது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. அதனால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என உறுதியாகத் தெரிகிறது" எனக் கூறினார்.