`மனோஜ் பாண்டியன் கொலை மிரட்டல் விடுக்கிறார்!’- சுயேச்சை வேட்பாளர் புகார் | Independent candidate lodged complaint against ADMK candidate

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (30/03/2019)

`மனோஜ் பாண்டியன் கொலை மிரட்டல் விடுக்கிறார்!’- சுயேச்சை வேட்பாளர் புகார்

அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகச் சுயேச்சையாக நெல்லை தொகுதியில் போட்டியிடும் பி.எஸ்.பாண்டியன் என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சுயேச்சை வேட்பாளர் பால் சாலமோன் பாண்டியன் 

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 26 பேர் களத்தில் இருக்கிறார்கள். 

தி.மு.க சார்பாக ஞானதிரவியம், அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்தல் களத்தில் மனோஜ் பாண்டியனின் பெரியப்பாவான பால் சாலமோன் பாண்டியன் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார்.  வேட்புமனு பரிசீலனையின்போது மனோஜ் பாண்டியனின் சொத்துக் கணக்கில் தவறு இருப்பதாக எதிர்ப்புத் தெரிவித்து அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என பால் சாலமோன் பாண்டியன் வலியுறுத்தினார். 

அதனால் அவருக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் வருவதாகப் பால் சாலமோன் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண் சக்திகுமார் ஆகியோரிடம் புகார் மனு அனுப்பியிருக்கிறார். 

பால் சாலமோன் பாண்டியன்

அந்த மனுவில், ``வேட்புமனு பரிசீலனையின்போது அ.தி.மு.க வேட்பாளர் தவறான சொத்துக் கணக்குக் காட்டியிருந்தார். அதனால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். அதன் காரணமாக எனது செல்போனுக்கு தொடர்புகொண்ட அவர், அவதூறான வார்த்தைகளால் என்னைத் திட்டியதுடன், சென்னைக்கு வந்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார். 

அ.தி.மு.க வேட்பாளர் மீது சுயேச்சை வேட்பாளர் புகார் அளித்த சம்பவத்தால் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.