`அறிவில்லாத அரசுதான் இதை வெளியிடும்’ - மோடிக்கு எதிராகச் சீறிய ப.சிதம்பரம்! | p chidambaram slams modi for mission shakthi announcement

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (30/03/2019)

`அறிவில்லாத அரசுதான் இதை வெளியிடும்’ - மோடிக்கு எதிராகச் சீறிய ப.சிதம்பரம்!

அறிவில்லாத அரசுதான் ராணுவ ரகசியங்களை வெளியிடும் என மத்திய பா.ஜ.க அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சிதம்பரம்

கடந்த 27-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, ``இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றைச் சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி' சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெறும்" என்று கூறினார். மத்திய அரசாங்கத்தின் காலம் முடிந்த நிலையில் அவரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. 

மோடி

தேர்தல் அறிவித்த பின்பு அதுவும் அரசாங்கத்தின் காலம் முடிந்த பின்பு, அவர் இப்படி நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டிய தேவை இல்லை. எனவே, இது தேர்தல் விதிமீறல் எனக் கூறப்பட்டது. கூடவே, விண்வெளி சாதனைகள் குறித்த அறிவிப்பை இஸ்ரோ அதிகாரிகள் அறிவிப்பதுதான் வழக்கம். இவற்றையெல்லாம் மீறித் தேர்தல் நேரத்தில் இப்படி மோடி பேசியுள்ளார் எனக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகள் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால், இதில் எந்த விதிமீறலும் இல்லை. தனது உரையில் கட்சியின் பெயரையோ, தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

சிதம்பரம்

இந்நிலையில், மோடியின் நடவடிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ``விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. அறிவில்லாத அரசுதான் ராணுவ ரகசியங்களை வெளியிடும். புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். பா.ஜ.க அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம்தான் காரணம். தடுமாறி வரும் பா.ஜ.க-வுக்கு ஊக்கம் அளிப்பதற்காகத்தான் இந்த அறிவிப்பவை மோடி வெளியிட்டுள்ளார்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க