`ரிஸைன் பண்ணிட்டு டி-ஷர்ட்டைக் கொடுத்துட்டுப்போன்னு சொல்லிட்டாங்க!’ - ஜொமோட்டோ ஊழியர் வேதனை | Zomato employee explains about puducherry mall issue

வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (30/03/2019)

கடைசி தொடர்பு:11:16 (01/04/2019)

`ரிஸைன் பண்ணிட்டு டி-ஷர்ட்டைக் கொடுத்துட்டுப்போன்னு சொல்லிட்டாங்க!’ - ஜொமோட்டோ ஊழியர் வேதனை

புதுச்சேரியில் உள்ள தனியார் மால் ஒன்று உடையைக் காரணம் காட்டி ஜொமோட்டோ டெலிவரி ஊழியரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

புதுச்சேரி மால்

அந்தச் சம்பவம் குறித்த செய்தியை நாம் பதிவிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ காட்சியில் உள்ள ஜொமோட்டோ டெலிவரி ஊழியரை தொடர்பு கொண்டுப் பேசினோம். ``என் பெயர் அசோக். 1 மாதத்துக்கு முன்பு ஜொமோட்டோவில் சேர்ந்தேன். அன்றைக்கு உணவு ஆர்டர் எடுக்க மாலுக்குச் செல்லும்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அந்த வீடியோவை சமூக ஃபேஸ்புக்கில் போட்டவுடன், ஜொமோட்டோ மற்றும் மால் தரப்பிலிருந்து சமாதானம் பேச என்னை நேரில் அழைத்தார்கள். அங்கு போனதும் உன்னிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. எங்கள் மீது தவறும் இல்லை. நீ வீடியோவை டெலிட் செய்னு சொன்னாங்க.

இதற்கிடையில் என் டீம் லீடர் எனக்கு போன்செய்து, ’ரிஸைன் பண்ணிட்டு டீ-ஷர்ட்டை கொடுத்துட்டுப் போ’ அப்படினு சொல்லிட்டாரு. அதே இடத்துல என் வேலையை ரிஸைன் பண்ணிட்டேன். மறுபடியும் ஜொமோட்டோவில் இருந்து எனக்குபோன் செய்து வீடியோவை டெலிட் பண்ணச் சொன்னார்கள். வேலையை ரிஸைன் பண்ணதுக்கு அப்புறம் எனக்கு உத்தரவு போட உங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுமக்களில் ஒருவனாக இந்தப் பிரச்னையை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். அதுக்கு என் மேல கேஸ் போடுவேன்னு சொன்னாங்க. போடுங்க நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டேன். 

ஜொமோட்டோ ஊழியர்

இப்படியான பிரச்னை ஜொமோட்டோவில் மட்டுமல்ல. அனைத்து ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களிலும் இதே நிலைதான். நான் வெளிப்படையாக பேசிவிட்டேன். மற்ற நிறுவன ஊழியர்கள் பேசவில்லை அவ்வளவுதான். நாங்கள் பணிபுரியும் நிறுவனத்திலும் சரி, இப்படியான மால்களிலும் சரி எங்களுக்கான குறைந்தபட்ச மரியாதைகூட இல்லாத நிலையில்தான் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

புரொவிடன்ஷியல் மால் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வைரவேல் என்பவரிடம் பேசினோம். ``ஆரம்பத்திலேயே அவரிடம் இது உங்களுக்கான வழி இல்லை என்று அமைதியாகத்தான் கூறினோம். ஆனால், அந்த வீடியோவை அவர் எடிட் செய்து போட்டிருக்கிறார். ஜொமோட்டோ, உபேர் ஈட்ஸ், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் எங்களின் டெலிவரி பார்ட்னர்ஸ். பொதுவாக இப்படியான வணிக வளாகம் மற்றும் பெரிய உணவகங்கள் போன்றவற்றில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், நிறுவனத்துக்கு தேவையான பொருள்களை எடுத்துச் செல்வதற்கு தனித்தனியேதான் வழிகள் இருக்கும்.

மால் ஊழியர்

வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்கும் முறைதான் இது. தோளில் அந்த டெலிவரி பேக்கை மாட்டிக்கொண்டு எஸ்கலேட்டரில் இவர்கள் செல்லும்போது வாடிக்கையாளர்கள் தவறி விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதாலேயே அவர்களை அந்த வழியில் அனுமதிப்பதில்லை. அவர்களுக்கென்று தனியாக சர்வீஸ் லிஃப்ட் வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அனைத்து டெலிவரி ஊழியர்களும் அதன் வழியாகத்தான் வந்து செல்கிறார்கள். இவர் மட்டும்தான் உள்நோக்கத்தோடு வந்து பிரச்னை செய்தார். இந்த நடைமுறைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் விளக்கமாக ஒப்பந்தமும் போட்டிருக்கிறோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எங்களைத் தொடர்புகொண்ட ஜொமோட்டோ நிறுவனம், அந்த ஊழியரைப் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்ததோடு வருத்தமும் கேட்டுக்கொண்டது’’ என்றார்.              

நீங்க எப்படி பீல் பண்றீங்க