`இந்த பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி!’ - மு.க.ஸ்டாலின் சாடல் | Stalin slams TN government

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (30/03/2019)

`இந்த பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி!’ - மு.க.ஸ்டாலின் சாடல்

எடப்பாடியின் ஆட்சியில் திருடர்கள் போலீஸ் வேடத்திலும், கொள்ளையர்கள் சுங்கத்துறையினர் வேடத்திலும் வந்து கொள்ளையடிக்கும் நிலை உள்ளதாக ராமநாதபுரத்தில் ஸ்டாலின் கடுகடுத்தார்.

ராமநாதபுரம் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் ஸ்டாலின்

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி மற்றும் பரமக்குடி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். அவர், ''கலைஞர் இல்லாமல் நடைபெறும் இந்தத் தேர்தலில், அவரின் மகனான ஸ்டாலின் உங்களிடம் ஆதரவு கேட்க வந்துள்ளேன் . நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய தேர்தல்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தல். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் மாநிலத்தில் தி.மு.க ஆட்சி நடைபெறுவதுபோல் நினைத்துக் கொண்டு இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் எங்களை விமர்சிக்கின்றனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயிகள் கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டம் அனைத்து மதத்தினரும் ஒன்றாக வாழ பெரியார் சமத்துவபுரம் உட்பட பல திட்டங்களைக் கொண்டு வந்தது தி.மு.க அரசு. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 617 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது.

ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகியவர் ஜெயலலிதா. கொடநாடு விவகாரம் தொடர்பாக எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் தற்கொலை, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை, சயானின் மனைவி, மகள்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் கொலைக்கு உடந்தையான எடப்பாடி முதல்வராக இருக்கலாமா?. 'அ.தி.மு.க ஆட்சியை 2 வருடமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர்  மோடி' என அண்மையில் தமிழக அமைச்சர் மணிகண்டனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றளவும் பல மீனவர்கள் இலங்கைச் சிறையில் உள்ளனர். தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுச் சிறை, 50,000 அபராதம், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என இலங்கை அரசு 2017-ம் ஆண்டு மோசமான சட்டம் கொண்டு வந்தது. இதை மோடியால் தடுக்க முடிந்ததா?.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று தன்னை நினைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என எடப்பாடி வாய் கூசாமல் சொல்கிறார். இந்தப் பொல்லாத ஆட்சிக்குப் பொள்ளாச்சியே சாட்சி. போலீஸ் உடையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கக் கூடிய ஆட்சியை, எடப்பாடி சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ள ஆட்சி எனத் தெரிவிக்கிறார். திருடர்கள் போலீஸ் உடையிலும், கொள்ளையர்கள் சுங்கத்துறையினர் உடையிலும் வந்து கொள்ளையடிக்கும் நிலையில்தான் எடப்பாடியின் ஆட்சி இங்கு நடந்து வருகிறது. இந்த ஆட்சியைக் காக்கும் காவலனாக மோடி இருந்து வருகிறார். கார்ப்பரேட் கம்பெனிகளின் காவலனாக மோடி இருந்து வருகிறார். அவரது கட்சி பி.ஜே.பி, தற்போது சி.ஜே.பி என மாறிவிட்டது. அதவாது கார்ப்பரேட் ஜனதா கட்சி என மாறிவிட்டது. இத்தகைய சர்வாதிகார பாசிச பா.ஜ.க-வை ராமநாதபுரத்திலிருந்து துரத்தியடிக்க வேண்டும்'' என்றார்.