'மகனுக்காக 1000 கோடி செலவு செய்யும் ஓ.பி.எஸ்!' – பிரசாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு | Election Campaign OPS spent Rs 1,000 crore for his son

வெளியிடப்பட்ட நேரம்: 06:32 (31/03/2019)

கடைசி தொடர்பு:06:32 (31/03/2019)

'மகனுக்காக 1000 கோடி செலவு செய்யும் ஓ.பி.எஸ்!' – பிரசாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

தங்க தமிழ்ச்செல்வன்

 

தேனி பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழக்கமாகப் பிரசாரத்தை துவங்கும் முன்பு தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் துவங்குவர். இந்நிலையில், நேற்று காலை பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து பிரசாரத்தை துவங்கினார், தேனி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன். அவருடன், பெரியகுளம் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் கதிர்காமுவும் பிரசாரத்தை துவங்கினார்.

 

ஜி.கல்லுபட்டியில் துவங்கி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி வழியாகத் தொடர்ந்த பிரசாரத்தின் போது பேசிய தங்கதமிழ்ச்செல்வன், “டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றபின்னர், பெரியகுளத்திலேயே தங்கியிருந்து மக்கள் குறைகளை தீர்த்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர், நானும், டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே வாகனத்தில் சென்றிருக்கிறோம். தன்னை உயர்த்திய டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பமே எதிர்க்கிறது. நீங்கள் ஓட்டுப் போடும் போது இரண்டு இயந்திரங்கள் இருக்கும். முதல் இயந்திரத்தின் 3வது இடத்தில் ஓ.பி.எஸ் மகனும், இரண்டாவது இயந்திரத்தின் 3வது இடத்தில் நானும் சமமாக இருப்போம். யாரை நீங்கள் உயர்த்த வேண்டுமோ அதனை நீங்களே முடிவு செய்யுங்கள். ஓ.பி.எஸ் தனது மகனுக்காக 1000 கோடி ரூபாய் வரை செலவு செய்ய இருக்கிறார். அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு வாக்களியுங்கள்” என்றார்.