‘நான் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்!’ -ஐ.டி ரெய்டு குறித்து துரைமுருகன் ஆவேசம் | Duraimurugan angry about the IT raid

வெளியிடப்பட்ட நேரம்: 07:06 (31/03/2019)

கடைசி தொடர்பு:07:06 (31/03/2019)

‘நான் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்!’ -ஐ.டி ரெய்டு குறித்து துரைமுருகன் ஆவேசம்

‘‘என்னுடைய வீடு, கல்லூரியில் 24 மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. மோடியும், எடப்பாடியும் வருமானவரித் துறையை ஏவிவிட்டு தி.மு.க-வை தொட்டுப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்’’ என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். மகனை ஆதரித்து, தொகுதி முழுவதும் துரைமுருகன் சூறாவளி பிரசாரம் செய்துவருகிறார். இந்த நிலையில், பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் காலை வரை வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள துரைமுருகனின், கிங்க்ஸ்டன் கல்லூரி மற்றும் பள்ளிக்கு 10 கார்களில் வந்த 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 30-ம் தேதி இரவு வரை நடத்திய தீவிர சோதனையில், துரைமுருகனுக்கு எதிரான ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் சோதனையை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

இது சம்பந்தமாக துரைமுருகன் கூறுகையில், ‘‘என்னுடைய வீடு, கல்லூரியில் வருமானவரித் துறையினர், 24 மணிநேரமாகக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு, எங்கேயாவது தவறு இருக்கிறதா  என்று தேடி தேடிப் பார்த்தார்கள். கிங்க்ஸ்டன் கல்லூரியில், 12 மணி நேரத்துக்கும் மேலாக அலசி எடுத்துவிட்டார்கள். சேர்மன் அறை முதல் எல்.கே.ஜி மாணவர்களின் வகுப்பறை வரை சல்லடைப் போட்டு சலித்துள்ளனர். விடுதியில் கபோர்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. கடைசியில், கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது. நீங்கள் சட்டத்தை மீறவில்லை. எனவே, நாங்கள் எந்தப் பொருளையும் கைப்பற்றவில்லை. உங்களிடத்தில் எந்த குற்றத்தையும் காண முடியவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் சென்றுவிட்டனர். எங்களின் தேர்தல் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்பதற்காகவே, வருமானவரித் துறை ஏவப்பட்டுள்ளது. மென்டல் டார்ச்சர் கொடுத்தால், நாங்கள் சோர்ந்துவிடுவோம் என்று கனவு கண்டார்கள். 

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், ஒரு கட்சியின் பொருளாளர், 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்பவர், 80 வயதை எட்டிப்பிடிப்பவர் போன்றவற்றைக்கூட பார்க்காமல், ஏதோ கோடி கோடியாய் சேர்த்துவைத்திருப்போம். கூடை கூடை அள்ளிக் கொண்டு போய்விடலாம் என்று நினைத்தார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம். மோடி மற்றும் எடப்பாடி அரசு, இப்படி ஒரு ஏவலைச் செய்திருக்கிறார்கள்.

வேலூர் நாடாளுமன்ற வேட்பாளரான என் மகனை 24 மணி நேரமாக அதிகாரிகள் தூங்கவிடவில்லை. தந்தை என்ற முறையில் கதிர்ஆனந்தை பார்க்கும்போது, பாசத்தில் கண்ணீர் வந்தது. என்னுடைய வீட்டிலிருந்து, ரூ.10 லட்சம் எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் பணத்தை செலவுக்கு வைத்திருந்தேன். ஒவ்வொருவரும், இவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. அந்தப் பணத்தை அதிகாரிகள் எடுத்துச் சென்றதைப் பற்றி கவலையில்லை. தி.மு.க-வை தொட்டுப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன். கதிர்ஆனந்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பேன்’’ என்றார்.