"தேர்தலை நிறுத்த செந்தில் பாலாஜி சதி செய்கிறார்!" - தம்பிதுரை காட்டம் | ADMK Candidate Thambidurai Slams Senthil Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (31/03/2019)

கடைசி தொடர்பு:07:40 (31/03/2019)

"தேர்தலை நிறுத்த செந்தில் பாலாஜி சதி செய்கிறார்!" - தம்பிதுரை காட்டம்

"முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை நிறுத்த சதி பண்ணுகிறார். ஆனால், அவரால் தேர்தலை தடுத்து நிறுத்தமுடியாது" என்று தம்பிதுரை கோபமாக தெரிவித்தார்.

தம்பிதுரை
 

        
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக மறுபடியும் தம்பிதுரையே களமிறங்கி இருக்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி களமிறக்கப்பட்டிருக்கிறார். இருவரும் தேர்தல் பிரசாரத்தை ஜரூராக தொடங்கி, ஹைஸ்பீடில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 'கடந்த இரண்டு முறையாக தொடர்ச்சியாக எம்.பியாக இருந்த தம்பிதுரை தங்கள் பகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என்று பல கிராம மக்கள் தம்பிதுரைக்கு எதிர்த்துக் கேள்வி கேட்டு வருகிறார்கள். இது ஜோதிமணிக்கு ப்ளஸாக அமைகிறது.

ஜோதிமணி

இந்நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியோடு ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது, அ.தி.மு.கவை சேர்ந்த திருமூர்த்தி என்பவர், ஜோதிமணிக்கு எதிராகவும், செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.இதனால், தி.மு.கவினர்களுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை திருமூர்த்தியோடு சென்ற பெரியசாமி என்பவர் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். கோபமான தி.மு.கவினர், இருவரையும் அடித்து உதைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

தாக்கப்பட்டவர்கள்

இந்நிலையில், "அந்த இரண்டு நபர்களும் கத்தியோடு வந்து, எங்களை தாக்கப் பார்த்தார்கள். கலவரத்தை ஏற்படுத்தி, தேர்தலை நிறுத்துவதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த ஏற்பாடு இது" என்று செந்தில் பாலாஜி வெடித்தார். அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் ஜோதிமணி புகாரும் கொடுத்தார். இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் திருமூர்த்தியும், பெரியசாமியும் சிகிச்சைப் பெறுவதற்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள் தரப்பிலும் செந்தில் பாலாஜி உள்ளிட்ட தி.மு.கவினர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

 

தம்பிதுரை

இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரையும் அ.தி.மு.கவின் கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் தம்பிதுரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,"அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த பயம் செந்தில் பாலாஜியைத் தொற்றிக்கொண்டுள்ளது. ஆகவே, வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, கரூர் தொகுதிக்காக மக்களவைத் தேர்தலை நிறுத்த செந்தில் பாலாஜி இப்படி கலவரம் செய்துள்ளார். அவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற கிரிமினல் நடவடிக்கையில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார். இதேபோன்றே அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலிலும், தேர்தலை தள்ளிவைக்க காரணமாக இருந்தார். இப்போது அந்த தொகுதி எம்.எல்.ஏ இல்லாமல் காலியாக இருக்கிறது.

செந்தில் பாலாஜி

அதேபோன்று, கரூர் நாடாளுமன்ற தொகுதியை காலியாக வைக்க வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். காமராஜருடன் தமிழகத்தில் காங்கிரஸ் போய்விட்டது. இப்பொழுது காங்கிரஸ் வலுவில்லாத சூழ்நிலையில் இருக்கிறது. அதனால், தி.மு.கவுடன் சேர்ந்தும், இதர கூட்டணிக் கட்சிகளை சேர்த்துக்கொண்டும், இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறது. இந்த சதித்திட்டத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். 'தேர்தலை தள்ளி வைக்க செய்யலாம்' என்ற செந்தில் பாலாஜியின் எண்ணம் எடுபடாது" என்றார்.