"10 வருஷமா எங்க போனீங்க; தம்பிதுரையிடம் கேள்வி கேளுங்கள்!" - ஜோதிமணி பேச்சுக்கு கைத்தட்டிய குழந்தை | Thambidurai walks in Street People Don't know who he is? - says Jothimani

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:10 (31/03/2019)

"10 வருஷமா எங்க போனீங்க; தம்பிதுரையிடம் கேள்வி கேளுங்கள்!" - ஜோதிமணி பேச்சுக்கு கைத்தட்டிய குழந்தை

 கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேச்சுக்கு பொதுமக்கள் அமைதி காக்க, பெண் குழந்தை ஒன்று தொடர்ச்சியாக கைத்தட்டி ஆரவாரம் செய்தது. அதை பார்த்த ஜோதிமணி, நெகிழ்ந்து போனதோடு, அந்த குழந்தையை கொஞ்சி, கையில் இருந்த எலுமிச்சைப் பழம் ஒன்றை கொடுத்து, குஷிப்படுத்தினார்.

கரூரில் ஜோதிமணி பிரசாரம்


 தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரங்கள் களைக்கட்டத் தொடங்கி இருக்கின்றன. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் தம்பிதுரையே களமிறங்கி இருக்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி வேட்பாளராகி இருக்கிறார். இதைதவிர, அ.ம.மு.க சார்பில் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேலும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர் ஹரிஹரனும் களத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தீவிர பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர்  ஜோதிமணி பிரசாரம்

இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புங்கம்பாடி கீழ்பாகம் ஊராட்சி, கணக்குவேலம்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கு பேசிய ஜோதிமணி, "கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் பெயர் என்னன்னு தெரியுமா" என்று குழுமி இருந்த பொதுமக்களிடம் கேட்டார். அதைக்கேட்ட பொதுமக்கள் பதில் சொல்லாமல் அமைதி காத்தனர். அதனால், தனது பேச்சைத் தொடர்ந்த ஜோதிமணி, "கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது இருப்பவர் தம்பிதுரை. அவர் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்.பியாக இருக்கிறார். உங்களிடம் வாக்கு சேகரிக்க அவர் வரும்போது, கடந்த 10 ஆண்டுகளாக எங்கு சென்றீர்கள் என கேள்வி கேளுங்க என்று கூறியபோது, ஒரு பெண்மணி தூக்கி வைத்திருந்த குழந்தை ஒன்று கைதட்டி ஆரவாரம் செய்தது.

காங்கிரஸ்  வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


 தொடர்ந்து பேசிய ஜோதிமணி, "தம்பிதுரை கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தனியாக நடந்து வந்தால் அவரை யாரென்றே மக்களுக்கு தெரியாது. அப்படி பத்தாண்டுகள் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.பி ஆகப் பணி செய்துள்ளார். ஆனால், எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சாதாரணமான ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்னை வேட்பாளராக அறிவித்திருப்பதே, ஏழை மக்களின் நிலையை உணர்ந்த ஒரு எம்.பி கரூரில் வேண்டும் என்பதற்காகத்தான்" என்று கூறியபோதும், தொடர்ந்து அக்குழந்தை தனது இரு கைகளை தட்டி ஆரவாரம் செய்தது. அதைப் பார்த்த ஜோதிமணி உற்சாகமானார்.

செந்தில்பாலாஜி

அதோடு, அங்கிருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும்  அக்குழந்தையக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பிரசாரத்தை முடித்த பின்னர் ஜோதிமணி அக்குழந்தையின் தாயையும், அந்த குழந்தையையும் சந்தித்து, விசாரித்தார். அந்த குழந்தையின் கன்னத்தில் செல்லமாக தட்டி கொஞ்சியவர், 'இவ்வளவு கூட்டமும் அமைதியாக இருக்க, எனது பேச்சுக்கு, நான் என்ன பேசுறேன்னே புரியாம இந்த குழந்தை கைத்தட்டி ஆரவாரம் செய்தது என்னை நெகிழ செய்துவிட்டது. இதுவே தான் எம்.பியான உணர்வை தருது' என்று நெஞ்சுருகிப்போனார். அதோடு, தனது கையில் வைத்திருந்த எலுமிச்சைக் கனி ஒன்றை அந்த குழந்தையிடம் கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.